மேட்டுப்பாளையம், அக்.2: சர்வதேச முதியோர் தினமாக அக்டோபர் 1ம் தேதி உலகம் முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மேட்டுப்பாளையம் அன்னை முதியோர் இல்லத்தில் இல்லத்தின் நிர்வாகி சந்திரா தலைமையில் கொண்டாட்டங்கள் நடைபெற்றது. இதில், ஓடந்துறை காந்தி நகர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவர்கள் மலர்கள் மற்றும் இனிப்புகளை கொடுத்து முதியோரை வாழ்த்தினர். மேலும், நடனமாடி முதியவர்கள் மகிழ்வித்தனர்.
அதேபோல், முதியோர்கள் மாணவர்களுக்கு புத்தகங்களை கொடுத்து மகிழ்வித்தனர். இந்நிகழ்ச்சியில் மாணவன் ஆகாஷ் தனது பிறந்த நாளை முதியோர் முன்னிலையில் கேக் வெட்டி கொண்டாடினார். இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமையாசிரியை புனித செல்வி, ஆசிரியர் உமா, துரைப்பாண்டியன், ஓய்வு பெற்ற துப்புரவு ஆய்வாளர் மணி, ஆசிரியர் முத்து சங்கையா, அரிமா.ஜெயராமன் உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர். பெற்றோர் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர். ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ஜெயராமன் நன்றி தெரிவித்தார்.