நாகர்கோவில், ஆக. 12:கன்னியாகுமரி மாவட்ட சதுரங்க பெற்றோர்கள் அமைப்பு, சதுரங்க கழகம் மற்றும் புனித சவேரியார் கத்தோலிக்க பொறியியல் கல்லுாரி இணைந்து நடத்தும் சர்வதேச ஃபீடே சதுரங்க விளையாட்டு போட்டி வரும் 15 முதல் 18ம் தேதி வரை சுங்கான்கடை புனித சவேரியார் கத்தோலிக்க பொறியியல் கல்லுாரியில் நடக்கிறது. இதில் சர்வதேச மாஸ்டர்களும் பங்கு கொள்கின்றனர். சர்வதேச தரப்புள்ளிகள் பெற ஒரு வீரர், சர்வதேச தரப்புள்ளிகள் பெற்ற 5 வீரர்களுடன் மோதி நிர்ணயிக்கப்பட்ட புள்ளிகள் பெற வேண்டும்.
குமரி மாவட்டத்தில் தற்போது சர்வதேச தரப்புள்ளிகள் பெற்ற 200 வீரர்கள் உள்ளனர். போட்டியில் டெல்லி, ஜார்கண்ட், மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா, கேரளம், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து சுமார் 500 வீரர்கள் கலந்து கொள்கிறார்கள். 8 சுற்றுகள் கொண்ட இப்போட்டி வரும் 15ம் தேதி காலை 11.00 மணிக்கு தொடங்குகிறது. போட்டியில் வயது வரம்பின்றி அனைவரும் கலந்து கொள்ளலாம்.
முதல் பரிசு ரூ.25 ஆயிரம் மற்றும் வெற்றிக்கோப்பை வழங்கப்படுகிறது. மொத்த பரிசுத்தொகை ரூ.3 லட்சம் பல்வேறு ரொக்க பரிசுகளாக வழங்கப்படுகின்றன. மேலும் குமரி மாவட்ட வீரர்களுக்கான சிறப்பு பரிசாக 7, 9, 11 மற்றும் 13 வயதிற்கு உட்பட்ட சிறுவர், சிறுமியருக்கு தனித்தனியே தலா 5 வெற்றி கோப்பைகளும் வழங்கப்பட உள்ளது. போட்டியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.