* குக்கே சுப்ரமண்யர் கோயில், கர்நாடகா.கர்நாடகாவில் முருகப் பெருமானை பாம்பு வடிவில் போற்றி வழிபடும் வழக்கம் பரவலாக இருக்கிறது. உடுப்பி, தர்மஸ்தலா கெல்லூர் முதலிய அனேக தலங்களில் முருகனைப் பாம்பு வடிவில் எழுந்தருள வைத்துப் போற்றி வழிபடுகின்றனர். இவற்றில் தலைமையானது குக்கே சுப்பிரமணியா எனும் தலமாகும். கர்நாடக மாநிலத்தின், மங்களூர் அருகே உள்ள தட்சின கர்நாடக மாவட்டத்தில், சுல்லியா வட்டத்தில், குக்கே சுப்ரமண்யா எனும் கிராமத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள மக்கள் இக்கோயிலை குக்கி சுப்பிரமண்ய சுவாமி கோயில் என்றும் அழைக்கின்றனர். இங்கு பெரிய மலை உள்ளது. அதற்குக் குமாரகிரி என்பது பெயராகும். அதிலிருந்து குமார தாரை என்று சிற்றாறு தோன்றி ஓடுகின்றது. முருகப் பெருமான் தாரகாசுரனைக் கொன்றபின் தமது வேலைக் கழுவித் தூய்மைப்படுத்துவதற்காக இந்த ஆற்றைத் தோற்றுவித்ததாகக் கூறுகின்றனர். இக்கோயிலுக்கு வடக்கில் ஆதி சுப்பிரமணியா என்ற திருத்தலம் உள்ளது. இங்கு பெரிய பாம்புப் புற்று உள்ளது. அதன்மீது பெரிய அளவில் தங்கமுலாம் பூசிய பாம்பும் ஏராளமான சிறிய பாம்புகளில் வடிவங்களும் வைத்து வணங்கப்படுகின்றன.கருவறையில் கீழே உடலைச் சுருட்டிக் கொண்டு விரிந்த படத்துடன் கூடிய பாம்பும், அதன்மீது அதே போன்று ஒரு பாம்பும், அதன் மீது மற்றோர் பாம்பும் என மூன்று பாம்புகள் ஒன்றன் மீது ஒன்றாக அடுக்காக (தூண் வடிவில் ) அமைந்துள்ளன. உச்சியில் உள்ள பாம்பின் படத்தின் மையத்தில் ஆறுமுகப் பெருமான் மயில் வாகனத்தில் எழுந்தருளியுள்ளார். இந்த அமைப்பு முழுவதற்கும் வெள்ளிக் கவசம் அணிவிக்கப் பெற்றுள்ளது. அருகில் உற்சவராகச் சில பாம்புகளின் உருவங்களும் உள்ளன. பாம்புகளோடு அறுமுகப்பெருமான் அழகுடன் கொலுவிருக்கின்றான். கருவறைக்கு நேர் எதிரில் கருட கம்பம் உள்ளது. இதில் கருடன் வீற்றிருந்து பாம்பு அரசர்களையும், சுப்பிரமணியரையும் போற்றி வழிபாடு கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது தூணையும் வெள்ளிக் கவச மிட்டு அழகுபடுத்தியுள்ளனர். ஒரு சமயம் இந்த உலகத்தை உற்பத்தி செய்த காஸ்யபனின் மனைவியரான கத்ரு, வினதை என்பவர்கள் ஒரு தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்கள் விளையாடிக் கொண்டிருந்த தோட்டத்தில் வெண்மையான ஒரு குதிரை அங்கு மேய்ந்து கொண்டிருந்தது. அதன் பின்பக்கமும், வாலும் ஒரு புதரில் மறைந்திருந்தது. அப்போது வினதை, கத்ருவிடம் ,‘‘அந்தக் குதிரையின் வால் எந்த நிறம்’’ என்று கேட்டாள். ‘‘அது வெள்ளை நிறத்தையுடைய குதிரை. எனவே, அதன் வாலும் வெண்மையாக இருக்கும்’’ என்று பதில் உரைத்தாள். அதற்கு கத்ரு, வினதையே அதன் வால் கரு நிறத்தை உடையது என்றாள். இப்படி இருவரும் தத்தம் கருத்தை வலியுறுத்திப் பேசிக் கொண்டே இருந்தனர். இறுதியில் அது வாய்ச் சண்டையாக உருவெடுத்தது. முடிவில் கத்ரு, வினதையிடம், ‘‘அதன் வால் வெண்மையாக இருந்தால் நான் உனக்கு அடிமை, கருப்பாக இருந்தால் நீ எனக்கு அடிமை இதற்குச் சம்மதமா ?’’ என்றாள் . வினதையும் அதற்கு ஒப்புக் கொண்டாள். கத்ரு உடனே ரகசியமாகத் தனது மக்களாகிய பாம்புகளை அழைத்து அந்தக் குதிரையின் வாலைக் கடித்துத் தமது விஷத்தால் கருப்பாக்கும்படி ஆணையிட்டாள். பெரிய பாம்புகள் அதற்கு உடன்படவில்லை. பலமுறை சொல்லியும் தனது பேச்சைக் கேளாததால் கோபம் கொண்ட கத்ரு அந்தப் பாம்புகளைத் தனது குழந்தைகள் என்றும் பாராமல், ‘‘நீங்கள் ஜனமேஜயன் செய்யும் சர்ப்ப யாகத்தில் விழுந்து மொத்தமாக அழியுங்கள்’’ என்று சாபமிட்டாள். பேசாமல் அஞ்சி நின்ற இளைய நாகங்களைப் பார்த்து ‘‘நீங்கள் பறவைகளுக்கு இரையாகி மாளுங்கள்,’’ என்றாள். தாயின் சாபத்தால் வருந்திய பாம்புகள் தமது குல முதல்வர்களான வாசுகி, அனந்தன், ஆதி சேடன் ஆகிய மூவரையும் சரணடைந்து தங்களைக் காக்குமாறு வேண்டின. அவை அந்தப் பாம்புகளை அழைத்துக் கொண்டு கயிலாசத்திற்குச் சென்று சிவபெருமானைச் சரணடைந்து தம்மைக் காக்குமாறு விண்ணப்பித்தன. சிவபெருமான் அவற்றைப் பூவுலகில் குமாரகிரி என்று சொல்லப்படும் இந்த மலையில் உள்ள ஆற்றங்கரையில் தவம் இருக்கும்படியும், உங்களுக்கு இத்தலத்தில் யாராலும் எவ்விதத்திலும் எந்தத் துன்பமும் நேராது என்றும் அபயம் தந்து அருட் பாலித்தார். தாயின் சாபத்திற்குப் பயந்த சில பாம்புகள் குதிரையின் வாலைப் பற்றி அதைக் கடித்துக் கருமையாக்கின. பின்னர், கத்ரு வினதையை அழைத்துக் கொண்டு, குதிரையின் அருகில் சென்று அதைக் காட்டினாள். அதன் வால் கருமையாக இருக்கவே வினதை தன் சொல்படியே அவளுக்கு அடிமையானாள். அடிமையான வினதை, எஜமானியான கத்ருவை அவள் செல்லும் இடமெலாம் அவளைச் சுமந்துகொண்டு செல்லவேண்டியதாயிற்று. இப்படியே பல காலங்கள் சென்றன. காலப்போக்கில் வினதை இரண்டு முட்டைகளைப் பெற்றெடுத்தாள். 500 ஆண்டுகளாகியும் அந்த முட்டையிலிருந்து எதுவும் வெளிவராததால் அதனை அவள் உடைத்துப் பார்த்தாள். அதில் கால் மட்டும் வளராத நிலையில் ஒரு மகன் இருந்தான். அவன் அவளைத் தொழுது, ‘‘தாயே, என் கால்கள் வளரும் முன்பே என்னை பிரசவிக்கச் செய்து விட்டாய். இன்னொரு முட்டையை உடைக்காதே அதிலிருந்து வலிய மகன் பிறப்பான்’’ என்று சொல்லிவிட்டுச் சூரியனை நோக்கித் தவம் செய்யத் தொடங்கினான். அவனுடைய தவத்தால் மகிழ்ந்த சூரியன் அவனுக்கு அருணன் என்று பெயரிட்டு அவனைத் தனது தேரோட்டியாக ஏற்றுக் கொண்டான். அவன் சொற்படி மேலும் 500 ஆண்டுகள் சென்றன, பிறகு முட்டையை உடைத்துக் கொண்டு கருடன் வெளிவந்தான். அவன் நடந்ததை அறிந்து, தனது ஆற்றலால் தாயின் துயரத்தை நீக்கி, அவளை விடுதலை செய்தான் என்று புராணங்கள் விரிவாகக் கூறுகின்றன. பின்னாளில் பல பாம்புகள் தாயின் சாபத்தால் சர்ப்ப யாகத்தில் வந்து வீழ்ந்து அழிந்தன. பறவைகள் தின்றதால் பல பாம்புகள் அழிந்தன.ஆனால், இந்த குமாரகிரியில் அடைக்கலம் புகுந்த பாம்புகள் மட்டும் அழிவில்லாமல் இருந்தன. அவை வாசுகி, அனந்தன், ஆதிசேடன் முதலிய மூவரின் தலைமையில் சிவபூசை செய்து கொண்டு மகிழ்வுடன் இருந்தன. பின்னர் ஒருநாள் முருகனே பெரிய பாம்பாகத் தோன்றி அவற்றிற்கு அருட்பாலித்தார். அந்த சுப்ரமணியனான பெரும் பாம்பை வழிபட்டதால் அவை தாயின் சாபத்திலிருந்து விடுதலை அடைந்தன. அதன் பிறகு பாம்புகள் பூமியில் செழித்து வளர்ந்தன என்று வரலாறுகள் கூறுகின்றன.முருகன் நெடுங்காலம் பாம்பு வடிவமாக இருந்து இங்கு ஒரு குகையில் எழுந்தருளியிருந்து சிவபெருமானை வழிபட்டுத் தாரகனைக் கொன்ற பாவத்தைத் தீர்த்துக் கொண்டார் என்பர். அவர் வழிபட்ட சிவலிங்கம் குகையில் இருந்ததால் அது குக்குலிங்கம் என்று அழைக்கப்பட்டதுடன், அதைச் சுற்றியுள்ள இத்தலமும் குக்கே லிங்கம் என்று பெயர் பெற்றது. பின்னாளில் இது முருகன் பெயரால் குக்ரீகு சுப்ரமண்யா என்ற பெயரில் வழங்கி வருகின்றது என்பர். மேலும், கர்நாடகா மாநிலத்தில் காட்டி சுப்ரமண்யா என்றொரு முருகத் தலமும் உள்ளது.இந்தக்கோயில் சிவபெருமானின் இரண்டாவது மகனான முருகக் கடவுளும் பாம்பு ராஜாவான வாசுகியும் உறையும் ஸ்தலமாக பிரசித்தி பெற்றுள்ளது. வெளிமுற்றம் மற்றும் உள்முற்றம் வழியாக பக்தர்கள் இந்தக்கோயிலின் கருவறைக்குச் செல்லலாம். ஒரு பீடத்தின் மீது சுப்ரமண்யர் சிலையும் அருகில் வாசுகிப்பாம்பின் சிலையும் காணப்படுகின்றன. மற்றொரு ஹிந்து புராண அவதாரமான ஆதிசேஷன் சிலையையும் கருவறையில் பக்தர்கள் பார்க்கலாம். கருவறைக்கும் முன்வாசல் அமைப்புக்கும் இடையில் வெள்ளி முலாம் பூசப்பட்ட கருடத்தூணை பக்தர்கள் காணலாம்.பக்தர்கள் கோயிலுக்குச் செல்வதற்கு முன், கோயிலுக்கு அருகில் ஓடும் குமாரதாரா எனும் நதியில் புனித நீராடிவிட்டு குக்கி சுப்பிரமணியசுவாமி கோயிலுக்குச் செல்ல வேண்டும். மேலும் கோயிலின் முன் மண்டபத்திற்கும் கர்ப்பகிரகத்திற்கும் நடுவே உள்ள கருடனின் வெள்ளித்தூணை வலம் வந்து, வெள்ளித்தூணில் பொதிந்துள்ள கருடனை வழிபட்டால் சர்ப்பங்கள் வெளிவிடும் விஷத்தை எதிர்கொள்ள முடியும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. டிசம்பர் மாதத்தில் இக்கோயிலில் மூலவரை பூஜை செய்யும் நம்பூதிரிகள், வாழை இலைகளில் விருந்து உணவு உண்டபின், அந்த வாழை இலைகளை வரிசையாக பரப்பி அதன் மேல் அங்கப்பிரதட்சனம் செய்தால் நன்மை பயக்கும் என பக்தர்கள் நம்புகின்றனர்.புராணக்கதைப்படி, சுப்ரமண்யசுவாமி, தாருகாசூரன், சூரபதுமன் மற்றும் மற்ற கொடிய அசுரர்களைப் போரில் வென்று கொன்ற பின்பு, தன் அண்ணன் கணபதி மற்றும் மற்றவர்களுடன், இக்குமாரமலையில் தங்கினார்கள். அப்போது தேவர்களின் தலைவன் இந்திரன் மற்றும் மற்ற தேவர்கள் சுப்பிரமணியசுவாமியை மகிழ்ந்து வரவேற்றனர். இந்திரனின் மகளான தேவசேனாவை, சுப்பிரமணிய சுவாமிக்கு திருமணம் செய்து கொடுக்க இந்திரன் விரும்பினான். இந்திரனின் விருப்பத்தை நிறைவேற்ற, சுப்பிரமணியசுவாமி தேவசேனாவை மணந்தார். இந்த தேவ திருமணம், குமாரமலையில் நடந்தது. பிரம்மா, விஷ்ணு மற்றும் சிவன் மற்றும் இதர தேவர்கள் எழுந்தருளி, தேவசேனா உடனாய சுப்பிரமணியசுவாமிக்கு மங்கல வாழ்த்துக்கள் தெரிவித்தனர். அன்று முதல் தேவசேனா உடனாய சுப்பிரமணியசுவாமி இங்கு எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சி அளிக்கிறார்.டிசம்பர் மாதத்தில் மூன்று நாட்கள், குமாரதாசு ஆற்றில் புனித நீராடி முருகனை வழிபடுதல் சிறப்பாகும். குக்கி சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெறும் சர்ப்ப சம்கார பூஜை எனும் நாக தோஷ நிவர்த்தி பரிகார பூஜை சிறப்பான பூஜையாகும். மேலும் அஸ்லேஷா நட்சத்திர (Ashlesha Nakshatra) நாளில் செய்யப்படும் நாகதோஷ நிவர்த்தி பரிகார பூஜை சிறப்பாக நடைபெறுகிறது.கந்த சஷ்டி, தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், திருக்கார்த்திகை மற்றும் மகாசிவராத்திரி. இந்த தூணின் உள்ளே வாசுகிப்பாம்பு உறைவதாக நம்பப்படுவதால் அதன் விஷமானது பக்தர்களை தாக்காமல் இருப்பதற்காக இந்த வெள்ளி முலாம் பூசப்பட்டுள்ளது. சர்ப்ப தோஷத்தை நிவர்த்தி செய்வதற்கான பூஜைகள் செய்வதற்கான கோயிலாக இது பிரசித்தமாக அறியப்படுகிறது. இந்த கோயிலின் முக்கிய திருவிழாவான தைப்பூச நாளின் போது இங்கு அதிக அளவில் பக்தர்கள் குவிகின்றனர். இது மட்டுமன்றி அஷ்லேஷ பலிபூஜை மற்றும் சர்ப்ப சம்ஸ்காரம் என்ற இரண்டு பெரிய சர்ப்ப தோஷ பூஜைகளும் இந்த கோயிலில் சிறப்பாக நடத்தப்படுகின்றன.-ந. பரணிகுமார், ஆட்சிலிங்கம்…