ஏற்காடு, ஆக.22: ஏற்காட்டில் திருமணத்திற்கு சென்று திரும்பியபோது, சரக்கு வாகனத்தின் ஆக்ஸில் உடைந்து, மரத்தில் மோதிய விபத்தில், பெண்கள் உள்பட 25 பேர் படுகாயமடைந்தனர். சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டவர்களை கலெக்டர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.சேலம் மாவட்டம், ஏற்காடு செந்திட்டு கிராமத்தை சேர்ந்த ஷோபனா(21) என்பவருக்கும், மோட்டூர் கிராமத்தை சேர்ந்த சோமசுந்தரம்(32) என்பவருக்கும் நேற்று திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு செந்திட்டு, அரங்கம், பெலாக்காடு, மாரமங்கலம், நார்த்தஞ்சேடு கிராமங்களை சேர்ந்த மணப்பெண்ணின் உறவினர்கள் 25 பேர், நேற்று காலை ஏற்காடு செந்திட்டு கிராமத்தில் இருந்து, மோட்டூர் கிராமத்திற்கு சரக்கு வாகனத்தில் சென்றனர். இதனை செந்திட்டு கிராமத்தை சேர்ந்த கோவிந்தன் மகன் சுப்பிரமணி(40) என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். திருமணம் முடிந்து பெண்ணின் உறவினர்கள் 25 பேர், மீண்டும் நேற்று மாலை செந்திட்டு கிராமத்திற்கு அதே சரக்கு வாகனத்தில் திரும்பினர்.
வாழவந்தியை தாண்டி ஆத்துப்பாலம் என்ற இடத்தில் சென்ற போது, எதிர்பாராத விதமாக சரக்கு வாகனத்தின் ஆக்ஸில் உடைந்தது. இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி, சாலையோர மரத்தின் மீது வேகமாக மோதியது. இந்த விபத்தில் பழனியம்மாள்(58), ராணி(60), வருதாயி(52), ஆண்டிச்சி(62), வெங்கடேஷ்(14), வெள்ளாயி(40), பழனியம்மாள்(50), ஆண்டி(60), மாரியம்மாள், அண்ணாமலைச்சி, லட்சுமி, அண்ணாமலை, சுப்ரமணி ஆகியோருக்கு கை, கால் முறிவு மற்றும் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் மருதாயி, பரசுராம், செல்வநாதன், வனிதா, தர்மா, துளசிதாசன், புவனேஸ்வரன், நதியா, ஆனந்தி, ராமாயி, மாது ஆகியோர் லேசான காயமடைந்தனர்.
விபத்தை பார்த்த அவ்வழியாக சென்றவர்கள், காயமடைந்த 25 பேரையும் மீட்டு, வாழவந்தி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். பின்னர், மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து ஏற்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை, கலெக்டர் கார்மேகம், நேற்றிரவு நேரில் பார்வையிட்டு ஆறுதல் கூறினார். பின்னர், அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கும்படி, மருத்துவர்களுக்கு அறிவுறுத்தினார். அப்போது, மருத்துவமனை டீன் மணி உடனிருந்தார்.