மயிலாடுதுறை, நவ.5: ஹெல்த் வாக் திட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார். மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் ”நடப்போம் நலம் பெறுவோம் 8 கி.மீ சுகாதார நடைபாதை ஹெல்த் வாக் திட்டத்தை மாவட்ட கலெக்டர் மகாபாரதி, ராமலிங்கம் எம்பி, ராஜகுமார் எம்எல்ஏ ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் மகாபாரதி தெரிவித்ததாவது: இந்த நடைபயிற்சியானது நம்மை சுறுசுறுப்பாகவும், ஆரோக்கியமான எடையுடன் இருக்கவும் நாள்பட்ட உடல்நல பிரச்னைகள் மற்றும் மன அழுத்தத்தை குறைக்கவும் உதவுகிறது. மேலும் இந்த நடைபயிற்சி இனி ஒவ்வொரு மாதத்திலும் முதல் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும்.
நடைபயிற்சியானது மாவட்ட கலெக்டர் அலுவலத்தில் தொடங்கி மயூரநாதர் தெற்கு வீதி, சின்னக்கடை தெரு, தரங்கம்பாடி சாலை வழியாக புதிய மாவட்ட கலெக்டர் அலுவலகம் வரை சென்று மீண்டும் அதே வழியில் திரும்ப வந்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நிறைவடையும் வகையில் 8 கி.மீ தேர்வு செய்யப்பட்டுள்ளது. இவற்றில் குடிநீர், இருக்கை வசதிகளுடன் மாதந்தோறும் முதல் ஞாயிற்றுக்கிழமை மருத்துவ முகாம் நடத்திடவும் திட்டமிடப்பட்டுள்ளது. நடைபாதையும் எத்தனை கி.மீ நடைபயிற்சி மேற்கொண்டோம் என்பதை அறியும் வகையில் ஒவ்வொரு கி.மீ தூரத்தை குறிக்கும் வகையில் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளது.உடல் ஆரோக்கியத்திடன் இருக்க நடைபயிற்சி அவசியம் என்பதை அனைவரும் அறிந்து நடப்போம் நலம் பெறுவோம் 8 கி.மீ சுகாதார நடைபாதை ஹெல்த் வாக் திட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட எஸ்பி மீனா, டிஆர்ஓ மணிமேகலை, நகர்மன்ற தலைவர் செல்வராஜ், சுகாதாரத்துறை துணை இயக்குநர் அஜீத் பிரபுகுமார்,சுகாதார துறை இணை இயக்குநர் குருநாதன் கந்தையா, மாவட்ட விளையாட்டு அலுவலர் அப்துல்லாஷ மற்றும் அரசு அலுவலர்கள், விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள், நடை பயிற்சியாளர்கள் கலந்து கொண்டனர்.