மீனம்பாக்கம், பிப்.15: வெளிநாடுகளில் இருந்து, சரக்கு கப்பல்களில் சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ₹6.60 கோடி மதிப்புடைய அலங்கார வான வேடிக்கை நடத்தும் பட்டாசுகள், செல்போன் பேட்டரிகள், காலணிகள் உள்ளிட்ட பொருட்களை சுங்க அதிகாரிகள் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர். முறையான ஆவணங்கள், உரிமங்கள் இல்லாமல், வெளிநாட்டில் இருந்து இந்தப் பொருட்களை கடத்தி வந்த நிறுவனங்கள் மீது சுங்க அதிகாரிகள் வழக்குகள் பதிவு செய்துள்ளனர். சென்னை துறைமுகத்திற்கு வெளிநாடுகளில் இருந்து வரும் சரக்கு கப்பல்களில், உரிய அனுமதி இல்லாமல், முறைகேடாக அபாயகரமான வெடி பொருட்கள் உள்ளிட்ட பல கோடி ரூபாய் மதிப்புள்ள பல்வேறு பொருட்கள் கடத்தி வரப்படுவதாக, சென்னை சுங்கத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில், சென்னை சுங்கத்துறை தனிப்படையினர், வெளிநாடுகளில் இருந்து சென்னை துறைமுகம் வரும் சரக்கு கப்பல்களை கண்காணித்து, சந்தேகப்படும் சரக்கு பெட்டகங்களை திறந்து பார்த்து சோதனை நடத்தி வந்தனர்.
அப்போது, வெளிநாட்டில் இருந்து வந்திருந்த ஒரு சரக்கு கப்பலில் இருந்த கன்டெய்னர் மீது சந்தேகம் ஏற்பட்டது. அந்த அந்த கன்டெய்னரில், தரை மற்றும் சுவர்களை சுத்தப்படுத்தும் கிளீனர்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனாலும் சுங்கத்துறை அதிகாரிகள் அந்த கன்டெய்னரை திறந்து பார்த்து சோதித்த போது, அதனுள் பட்டாசுகள் இருப்பது தெரியவந்தது. இவைகள் பெரிய விழாக்கள் மற்றும் ஆடம்பர திருமண விழாக்கள் போன்றவைகளின் போது, அலங்கார வான வேடிக்கைகளுக்காக பயன்படுத்தக் கூடியவைகள்.
இவைகளை சிறப்பு உரிமம் பெற்றவர்கள் மட்டுமே, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டும். அதோடு அதை என்ன காரணத்துக்காக இறக்குமதி செய்கின்றனர், யார் யாருக்கு விநியோகிக்க இருக்கின்றனர் என்பது பற்றிய முழு தகவல்களையும், சுங்கத்துறைக்கு தெரியப்படுத்தி இருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு தெரியப்படுத்தாமல், அதோடு முறையான ஆவணங்களும் இல்லாமல், இவை இறக்குமதி செய்யப்பட்டு இருந்தன. அந்த கன்டெய்னரில் 3,672 அலங்கார வான வேடிக்கை பட்டாசு பார்சல்கள் இருந்தன. அதன் சர்வதேச மதிப்பு ₹1.47 கோடி. இதை அடுத்து சுங்க அதிகாரிகள், அவைகளை பறிமுதல் செய்தனர். அதோடு இது சம்பந்தமாக சுங்கத்துறை வழக்குப் பதிவு செய்து, இதை இறக்குமதி செய்த நிறுவனம் குறித்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் மற்றொரு சரக்கு கப்பலில் வந்திருந்த மேலும் 3 கன்டெய்னர்கள் மீது சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அந்த கன்டெய்னர்களுக்குள் ஸ்டேஷனரி சம்பந்தப்பட்ட பொருட்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், சந்தேகமடைந்த அதிகாரிகள், அந்த3 கன்டெய்னர்களையும் திறந்து பார்த்து சோதித்தபோது, 15,000 செல்போன் பேட்டரிகள், 11,624 காலணிகள், கார் டயர்களில் பொருத்தும், 516 அலாய் வீல்கள் மற்றும் லேசர் மிஷின்கள் இருந்தது தெரிந்தது. அதன் சர்வதேச மதிப்பு ₹5.13 கோடி. இந்த பொருட்களை இறக்குமதி செய்வதற்கு உரிய ஆவணங்கள் இல்லை. இதனால், சுங்க அதிகாரிகள் இந்தப் பொருட்களையும் பறிமுதல் செய்தனர். அதோடு இதுகுறித்து வழக்கு பதிவு செய்து, இந்தப் பொருட்களை உரிய ஆவணங்கள் இல்லாமல் இறக்குமதி செய்த நிறுவனங்கள் குறித்து விசாரணை நடத்திக் கொண்டு இருக்கின்றனர்.
சென்னை துறைமுகத்திற்கு வெளிநாடுகளில் இருந்து வந்த சரக்கு கப்பல்களில், ஒரே நேரத்தில் சுங்கத்துறையினர் நடத்திய சோதனைகளில் ₹6.60 கோடி மதிப்புடைய பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. இந்த சரக்கு கப்பல்கள் துபாய் மற்றும் சீனாவில் இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனாலும் சுங்கத்துறை அதிகாரிகள் தரப்பில், இந்த வழக்குகள் தற்போது விசாரணையில் இருப்பதால், இந்த சரக்கு கப்பல்கள் எந்த நாடுகளில் இருந்து வந்தன என விசாரிக்கிறோம் என்றனர்.