நாகர்கோவில், நவ.5: சம வேலைக்கு சம ஊதியம் தொடர்பாக நவம்பர் மாதம் 8ம் தேதி சென்னையில் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற உள்ளது. தொடக்க கல்வித்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் 1.6.2009க்கு பின்னர் இடைநிலை ஆசிரியர் பணியில் நியமனம் பெற்றவர்கள் 1.6.2009க்கு முன்னர் இடைநிலை ஆசிரியர் பணியிwல் நியமனம் பெற்றவர்களுக்கு இணையான ஊதியம் கோரும் கோரிக்கை சார்பாக ஆய்வு செய்து பரிந்துரைகள் அளிக்க குழு அமைக்க அரசாணை வெளியிடப்பட்டது.
அதன்படி சம வேலைக்கு சம ஊதியம் குறித்த கோரிக்கை சார்பாக குழுவின் தலைவரான அரசு நிதித்துறை செயலாளர் தலைமையில் பள்ளி கல்வித்துறை செயலாளர் மற்றும் தொடக்க கல்வி இயக்குநர் முன்னிலையில் அரசு கடிதத்தின்படி வரும் 8ம் தேதி மாலை 4 மணிக்கு கூட்டத்திற்கு ஐந்து சங்க பிரதிநிதிகள் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சென்னையில் தலைமை செயலகத்தில் 6 வது தளம் நாமக்கல் கவிஞர் மாளிகை, பள்ளி கல்வித்துறை கூட்ட அரங்கில் நடைபெறும் கூட்டத்தில் தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி, தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி, தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் சங்கம், தமிழக தொடக்க பள்ளி ஆசிரியர் கூட்டணி, தமிழ்நாடு அரசு பள்ளி ஆசிரியர்கள் சங்கம் ஆகியன பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சங்க பிரதிநிதிகளை தவிர மற்ற பிரதிநிதிகளை பிறிதொரு நாளில் நடைபெறும் கூட்டத்திற்கு அழைக்கப்பட இருப்பதாகவும் தொடக்க கல்வி இயக்குநர் சங்கத்தினருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.