கலசபாக்கம், ஆக.26: கலசபாக்கம் பகுதியில் தொடர் மழை காரணமாக விவசாயிகள் உற்சாகத்துடன் சம்பா நடவு பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கலசபாக்கம் பகுதி மக்கள் விவசாயத்தையே முழுமையாக நம்பியுள்ளனர். கிணற்று பாசனம் மற்றும் ஏரி பாசனத்தை நம்பியுள்ள விவசாயிகள் சம்பா சாகுபடி பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆடி-1 ஆடி 18 ஆவணி 6 ஆகிய நாட்களில் சம்பா சாகுபடி செய்ய விதைவிடும் பணிகளில் ஈடுபட்டனர்.
தற்போது தொடர் மழை காரணமாக கலசபாக்கம் பகுதி மக்களின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் மேல் சோழங்குப்பம் கிராமத்தில் உள்ள மிருகண்டா அணை நிரம்பி 2 முறையாக அணை திறக்கப்பட்டு, 17 ஏரிகளுக்கு அணையிலிருந்து நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேலும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அதிரடியாக பண்ணை குட்டைகள் மற்றும் பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளை கிணறுகளில் மழைநீர் சேகரிப்பு தொட்டிகள் அமைக்கப்பட்டது.
இதனால் நிலத்தடி நீர்மட்டம் அதிகரித்துள்ளது. இதன்மூலம் ஆழ்துளை கிணறுகளிலும் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருகின்றன. மேலும், கடந்த 3 ஆண்டுகளாக செய்யாற்றில் தொடர்ந்து தண்ணீர் செல்வதால் அதன் கரையோரம் உள்ள விவசாயக் கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இதனால் விவசாயிகள் 3 பருவமும் நெல் சாகுபடி செய்யும் பணியில் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் எதிர்காலத்தில் உணவு உற்பத்தி அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. உணவு உற்பத்தி அதிகரிப்பதன் மூலம் விலைவாசி குறைய வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
நிலத்தடி நீர்மட்டம் உயர்வு
திமுக ஆட்சி பொறுப்பேற்ற 3 ஆண்டுகளில் தொடர் மழை காரணமாக செய்யாற்றில் தண்ணீர் செல்வதால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இதனால் விவசாயிகள் 3 பருவமும் நெல் சாகுபடி செய்து வருகின்றனர். வருண பகவான் தொடர்ந்து கை கொடுப்பதாலும் விவசாயிகளுக்கு தனியாக வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்வதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.