திருவாரூர், ஆக. 26: திருவாரூர் மாவட்டத்தில் போலீசாருக்கான வாகனங்களை உரிய முறையில் பராமரிக்குமாறு எஸ்பி ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை தடுப்பது தொடர்பாக டி.எஸ்.பிகளுடனான கலந்தாய்வு கூட்டம் எஸ்.பி. அலுவலகத்தில் எஸ்.பி ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் டி.எஸ்.பிகள் மணிகண்டன் (திருவாரூர்), சோமசுந்தரம் (திருத்துறைப்பூண்டி), ராஜா (முத்துப்பேட்டை), அஸ்வத்ஆண்டோஆரோக்கியராஜ் (மன்னார்குடி), மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பிக்கள் பழனிசாமி மற்றும் பாஸ்கரன், மதுவிலக்கு பிரிவு டி.எஸ்.பி இமானுவேல் ராஜ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதில் எஸ்.பி ஜெயக்குமார் பேசுகையில், மாவட்டத்தில் நிலுவையில் இருந்து வரும் குற்ற வழக்குகளை விரைந்து முடித்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக் கொடுப்பதற்கு போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கைது செய்யப்பட வேண்டிய நபர்கள், பிடி கட்டளை நிறைவேற்றப்பட வேண்டியவை, வாகன தணிக்கை, வாகன விபத்துகளை குறைத்தல், இரவு ரோந்து பணி போன்றவற்றினை போலீசார் உரிய முறையில் மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார். மேலும் மாவட்டத்தில் கஞ்சா, பான்மசாலா, குட்கா போன்ற தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுடன் தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக வரும் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு விநாயகர் சிலைகளுக்கு பாதுகாப்பு அளிப்பது, சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பது போன்ற பணிகளை போலீசார் உரிய முறையில் கண்காணித்து பணியாற்றிட வேண்டும் என்று தெரிவித்தார்.
மேலும் குற்ற பதிவேடுகள் மற்றும் போலீசாருக்கான வாகனங்களை எஸ்.பி ஜெயக்குமார் ஆய்வு செய்த நிலையில் துறையில் பயன்படுத்தப்பட்டு வரும் 4 சக்கர மற்றும் இருசக்கர வாகனங்களை உரிய முறையில் பராமரித்திட வேண்டும் என்றும் போலீசாருக்கு அறிவுரைகளை வழங்கினார்.