திருவாரூர், செப். 21: பேரறிஞர் அண்ணாதுரை. தந்தை பெரியார் பிறந்தநாளையொட்டி அக். 5, 6ம் தேதிகளில் மாவட்ட அளவில் நடத்தப்படும் பேச்சு போட்டியில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்துகொள்ளுமாறு திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாரு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
திருவாரூர் மாவட்டத்தில் பேரறிஞர் அண்ணாதுரை பிறந்தநாளையொட்டி அடுத்த மாதம் 5ம் தேதியும், தந்தை பெரியார் பிறந்தநாளையொட்டி 6ம் தேதியும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் தனிதனியே பேச்சுபோட்டிகள் நடைபெறுகிறது. திருவாரூர் ஜி.ஆர்.எம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் இப்போட்டி காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. அண்ணா குறித்த போட்டியில் பள்ளி மாணவர்களுக்கு காஞ்சித் தலைவன், அண்ணாவும் பெரியாரும், தமிழும் அண்ணாவும், எழுத்தாளராக அண்ணா, தென்னாட்டு பெர்னாட்ஷா எனும் தலைப்புகளில் நடைபெறுகிறது.
கல்லூரி மாணவர்களுக்கு அண்ணாவும் மேடைபேச்சும், கடமை கண்ணியம் கட்டுப்பாடு, மக்கள் தொண்டே மகேசன் தொண்டு, வாய்மையே வெல்லும், ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம் எனும் தலைப்புகளில் போட்டிகள் நடைபெறும். 6ம் தேதி நடைபெறும் பெரியார் குறித்த போட்டியில் பள்ளி மாணவர்களுக்கு வெண்தாடி வேந்தர், வைக்கம் வீரர், பகுத்தறிவு பகலவன், பெரியாரின் சமூகச் சீர்த்திருத்தங்கள் எனும் தலைப்புகளிலும், கல்லூரி மாணவர்களுக்கு பெரியாரும் பெண் விடுதலையும், சுயமரியாதை இயக்கம், தெற்காசியாவின் சாக்ரடீஸ், தன்மானப் பேரொளி, தந்தை பெரியாரின் சமூகநீதிச் சிந்தனைகள் எனும் தலைப்புகளிலும் போட்டிகள் நடைபெறும்.
இப்போட்டிகளில் வெற்றிபெறுபவர்களுக்கு ரொக்கப் பரிசு, சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. போட்டிகளில் பங்குபெறும் மாணவர்கள் ஒரு கல்லூரிக்கு இருவர் என தஞ்சை மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குநரும், பள்ளி மாணவர்களை மாவட்ட முதன்மை கல்வி அலுவலரும் தேர்வு அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இதுதொடர்பான விவரங்களுக்கு மாவட்ட தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தை 04366224600 என்ற தொலைபேசி எண் மூலமாக தொடர்புகொள்ளலாம். இவ்வாறு கலெக்டர் சாரு தெரிவித்துள்ளார்.