திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் சம்பா சாகுபடி காப்பீடு திட்டம் தொடர்பாக தாசில்தார் தலைமையில் கிராம நிர்வாக அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் 9 தாலுகா அலுவலகங்களிலும் நேற்று நடைபெற்றது. பருவமழை காலங்களில் வெள்ளம், புயல் மற்றும் இயற்கை சீற்றங்களால் விவசாய பெருங்குடி மக்கள் பாதிக்கும் போது விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் வருமானத்தையும் பாதுகாத்திடும் வகையில், தமிழகத்தில் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டமானது செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, கடந்தாண்டில் சம்பா சாகுபடியின் போது ஏற்பட்ட பயிர் பாதிப்பிற்கு இழப்பீடு தொகையாக ரூ.560 கோடி முதல்வர் மு.க.ஸ்டாலின் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதுடன், நடப்பாண்டில் காப்பீடு செய்வதற்கும் உரிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.