நாமக்கல், ஏப்.19: நாமக்கல்லில் வரும் 25ம் தேதி சமையல் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடக்கிறது.இதுகுறித்து நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வரும் 25ம் தேதி(செவ்வாய்க்கிழமை)மாலை 3 மணிக்கு சமையல் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது. இதில் சமையல் காஸ் நுகர்வோர்கள் நலன் கருதி, அனைத்து எண்ணெய் மற்றும் சமையல் காஸ் நிறுவன மேலாளர்கள், சமையல் காஸ் ஏஜெண்டுகள், விநியோகஸ்தர்கள் பங்கேற்கின்றனர். சமையல் காஸ் விநியோகம் தொடர்பான குறைபாடுகள் மற்றும் கோரிக்கைகளை தெரிவிக்க விரும்புவோர் கூட்டத்தில் கலந்துகொண்டு, மனு அளிக்கலாம். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.