ஈரோடு,நவ.30: நீதிக்காக பாடுபடுபவர்களை சிறப்பிக்கும் வகையில் கடந்த 1995ம் ஆண்டு முதல் சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது வழங்கப்பட்டு வருகிறது. இதில் விருது பெறுபவருக்கு ரூ. 5 லட்சம் விருது தொகையும், ஒரு பவுன் தங்கப் பதக்கமும், தகுதி உரையும் வழங்கப்படும். இதற்கான விருதை பெறுபவர் முதலமைச்சரால் தேர்வு செய்யப்படுவார். அதன்படி 2024ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருதாளரை தேர்ந்தெடுக்க பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன.
சமூக நீதிக்காக பாடுபட்டு பொதுமக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்திட மேற்கொள்ளப்பட்ட பணிகள், அதன் பொருட்டு செய்த சாதனைகள் ஆகிய தகுதி உடையவர்கள் தங்களது விண்ணப்பத்தை ஈரோடு கலெக்டருக்கு அனுப்பி வைக்கலாம்.அதில் சுயவிவரம், முழு முகவரி, தொலைபேசி எண் மற்றும் சமூக நீதிக்காக பாடுபட்ட பணிகள் குறித்த விவரம்,அதற்கான ஆவணங்கள் ஆகியவை இருக்க வேண்டும்.
மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு ஈரோடு கலெக்டர் அலுவலக புதிய கட்டிடத்தில் 4ம் தளத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகலாம். இதற்கான விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட அலுவலகத்துக்கு டிசம்பர் 20ம் தேதிக்குள் கிடைக்கும்மாறு அனுப்பி வைக்க வேண்டும்.