புதுச்சேரி, ஜூன் 25: புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கேட்டு சமூக அமைப்புகள் சார்பில் டெல்லியில் 27ம்தேதி போராட்டம் நடைபெற உள்ளதாக நேரு எம்எல்ஏ கூறியுள்ளார். இதுகுறித்து புதுச்சேரி சட்டசபையில் உள்ள அவரது அலுவலகத்தில் சுயேட்சை எம்எல்ஏ நேரு நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: புதுச்சேரியில் மக்களுக்கான பணி தொய்வடைந்து, தேர்வு செய்யப்பட்ட அரசாங்கத்துக்கு அதிகாரம் இல்லாத நிலை உள்ளது. துணை நிலை ஆளுநர், தலைமை செயலர், ஐஏஎஸ் அதிகாரிகள், மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசாங்கம் இடையிலான அதிகார மோதலால் ஒட்டுமொத்தமாக வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது.
நமக்கு பின்னால் சுதந்திரம் அடைந்தவர்கள் மாநில தகுதி பெற்று சுயமரியாதையுடன் வாழ்கிறார்கள். 2வது சுதந்திரத்துக்கு புதுச்சேரி தயாராகி வருகிறது. புதுச்சேரிக்கு மாநில தகுதி வேண்டி பொதுநல அமைப்புகளுடன் டெல்லி ஜந்தர் மந்தரில் வரும் 27ம்தேதி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம். இதில் புதுச்சேரியில் இருந்து சமூக அமைப்புகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொள்கின்றனர். ஆர்ப்பாட்டத்தில் 151 பேர் ரயில் மூலமாகவும், 40 பேர் வானூர்தி மூலமாகவும் டெல்லிக்கு செல்ல இருக்கிறோம்.
அனைத்து கட்சிகளும் மாநில அந்தஸ்து போராட்டத்துக்கு ஆதரவு அளிக்க வேண்டும். டெல்லி சென்று போராட்டம் நடத்த யாரும் முன்வரவில்லை. முதன்முதலாக சமூக அமைப்புகள் இதனை கையில் எடுத்துக் கொண்டுள்ளோம். முதல்வர் ரங்கசாமி மாநில அந்தஸ்தை ஆதரிக்கிறார். ஆனால் டெல்லி செல்வதையோ அல்லது தீவிரமான போராட்டத்தையோ அவர் முன்னெடுக்கவில்லை. மற்ற கட்சிகளும் சமூக அமைப்புகள் செய்கிறார்களே என நினைக்கிறார்கள், அப்படி நினைக்கக் கூடாது.
ஒன்றிய அரசுக்கு நாம் கொடுக்கும் அழுத்தம் மூலமாகத்தான் பெற முடியும். கேட்டால்தான் கொடுப்பார்கள், தட்டினால் திறக்கப்படும். இது ஒட்டுமொத்த புதுச்சேரி மாநிலத்தில் மிக முக்கியமான பிரச்னை. எனவே அனைத்து கட்சிகளும் போராட முன்வர வேண்டும். மாநில அந்தஸ்துக்கான போராட்டத்தை ஆதரிக்க வேண்டுமென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, 40 எம்பிக்களுக்கு கடிதம் எழுதியுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.