திருப்பூர், நவ.13: திருப்பூர் திலகர் நகர் பகுதியில் நடைபெறும் சமூகவிரோத செயல்களை தடுக்க கோரி அப்பகுதி பொதுமக்கள், அனைத்து அரசியல் கட்சியினர் 15.வேலம்பாளையம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர். திலகர் நகர் டிரஸ்ட் செயலாளர் சண்முகம், அப்பகுதி பொதுமக்கள், அனைத்து அரசியல் கட்சியினர், பொதுநல அமைப்பினருடன் வந்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
திலகர் நகர் பகுதியில் கடந்த சில நாட்களாக பொதுமக்களின் உயிருக்கும் உடைமைக்கும் அச்சுறுத்தும் வகையில் ராஜேஷ், கார்த்திக் மற்றும் அவர்களுடைய நண்பர்கள் 7 பேர் செயல்படுகின்றனர். இரு சக்கர வாகனங்களில் வந்து பொதுமக்களை பார்த்து கொலை மிரட்டல் விடுப்பதும், ஒரு அமைப்பின் பெயரை கூறி மிரட்டுவதுமாக உள்ளனர். ரோட்டில் அமர்ந்து மது அருந்துவது, கஞ்சா புகைப்பது, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சத்தம் போடுவது போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுகின்றனர்.
மேலும், திலகர் நகர் மூன்றாவது வீதி, நால் ரோடு ஆகிய பகுதிகளில் அமர்ந்து கொண்டு பெண்களை கேலி செய்வதும், வெளி மாநில தொழிலாளர்களை மிரட்டி செல்போன் பறிப்பது போன்ற செயல்களிலும் ஈடுபடுகின்றனர். இதனை தட்டி கேட்பவர்களை கொலை மிரட்டல் விடுக்கின்றனர். எனவே அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமென கூறியிருந்தனர். 4 நாட்களுக்குள் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் வரும் ஞாயிற்றுகிழமை 17ம் தேதி திலகர் நகர் பஸ் ஸ்டாப் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவெடுத்துள்ளனர்.