விருதுநகர், ஆக.14: சமுதாய அமைப்புகள் ஆக.15ல் பொதுக்குழு கூட்டம் நடத்த வேண்டும் என கலெக்டர் தெரிவித்துள்ளார். விருதுநகர் கலெக்டர் ஜெயசீலன் வெளியிட்ட தகவல்: விருதுநகர் மாவட்டத்தில் ஊரக வாழ்வாதார இயக்கத்தில் செயல்பட்டு வரும் சமுதாயம் சார்ந்த அமைப்புகளான சுய உதவிக்குழுக்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள், கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் நாளை காலை 11 மணியளவில் பொதுக்குழு கூட்டம் நடத்த வேண்டும்.
அதில் வட்டார அளவிலான கூட்டமைப்புகளால் மேற்கொள்ளப்படும் தகுதியுடைய மகளிரை கொண்டு குழு அமைத்தல், உரிய காலத்தில் கடன் மதிப்பீடு செய்து கடன் பெற்றுத்தருதல், தகுதியான குழுக்களுக்கு சமுதாய முதலீட்டு நிதி, சுழல் நிதி பெற்றுத்தருதல், திறன் வளர்ச்சிக்கு திட்டமிடுதல், குழுக்களிடையே வருவாய்பெருக்கும் செயல்பாடுகளை ஏற்படுத்துதல் ஆகிய திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்து விவாதித்து தீர்மானம் இயற்ற வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.