நீர்வழிபாடுஇயற்கை ஆற்றல்களாக விளங்கும் நீரையும், நெருப்பையும் எதிர்மங்களின் ஒருமையாகப் பண்டையச் சமூகத்தால் இணைத்து நோக்கப்பட்டது. இவற்றைச் சூரியன், சந்திரன் ஆகியவற்றுடன் தொடர்புபடுத்தி எண்ணினர். குளுமை நிரம்பிய சந்திரனை நீராகவும், வெப்பம் கனிந்த சூரியனை நெருப்பாகவும் கொண்டனர். மற்றொரு முறையிலும் இவை உருவகம் பெற்றன. நெருப்பைத் தம் கருவில் சுமந்துள்ள பெண்ணாக நிலத்தையும், நீரை விந்தாகக் கொட்டும் ஆணாக, வானத்தையும் உருவகித்தனர். இங்கு நீரும் நெருப்பும் வானமாகவும், பூமியாகவும் உருவகிக்கப் பெற்றுள்ளன.நீர்ஆற்றுநீர், குளத்துநீர், கடல் நீர் போன்றன அனைத்தும் மக்களால் வழிபடப்பெற்றன. நீர், வானத்தின் வண்ணத்திற்கேற்ப தம்முடைய வண்ணத்தையும் மாற்றிக் கொள்கிறது. இதனால் நீர் உலகத்தையும், மனிதனையும் பிரதிபலிக்கின்றது என்று பழங்குடி மக்கள் கருதினர். நீர் கரைபுரண்டு ஓடுகையில் அதன் ஓசையைக் கர்ச்சனையாகவும், முணுமுணுப்பாகவும் கருதினர். மிகுமழை பெய்து வெள்ளம், புயல் போன்றன ஏற்படுகையில் நீர் சினம் கொண்டிருப்பதாகக் கருதினர். நீரால் அழிவுகள் நேரிட்டபோது அவற்றினின்று தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்காக நீரை வழிபடத் தொடங்கினர். வேளாண்மையின் உற்பத்திக்கு நீர் இன்றியமையாத் தேவையாக இருந்ததனாலும், நீரை ஆற்றல்மிகு சக்தியாகக் கருதினர். புராதனச் சமய காலத்தில் பின்வரும் கருத்துக்களுடன் நீரைத் தொடர்புபடுத்திப் பேசினர்.1. நீரே ஆதிகாலப் படைப்பாகும் (முதல் படைப்பு)2. தூய்மையாக்கத்திற்கும், மாற்றத்திற்கும் உரிய கருவி. 3. உயிரூட்டச்சக்தி4. தீர்ப்பளிக்கும் கருவிஉலகத் தோற்றக் காலத்தில் நீர் மட்டுமே எல்லாமாக இருந்தது. பின்னர்தான் நீரிலிருந்து நிலம் தோன்றியது. பிறகு நிலம் தனியாகவும் வானம் தனியாகவும் பிரிந்துவிட்டது. எனவே நீரை எல்லாவற்றிற்கும் அடிப்படையாகக் கருதினர். ‘முதல் நீர்ப் பிரளயம்’ பண்டையக் காலத்தில் பேரழிவை ஏற்படுத்தியதனால், அப்பிரளயத்தைப் பற்றிய கதைகள் யூரேஷியா, அமெரிக்கா போன்ற நாடுகளின் தொன்மங்களில் பெருவழக்கில் உள்ளன. உலகின் பெற்றோராக வானத்தையும் நிலத்தையும் இணைத்து பல தொன்மக் கதைகள் வழங்கின. வானத்தின் விதையால் (நீர்) நிலம் கருவுற்றதாகக் கருதிய பழங்குடி மக்கள், நீர் சுகமாக்குவதும் அழிப்பதும் மட்டுமின்றி, வளமைக்கும் உதவுகிறது என்று நம்பினர். மந்திரச் சடங்குகளில் நீரை, மனிதனின் வளமைக் குறியீடாகக் கொள்ளும் மரபு பரவலாகக் காணப்படுகிறது. பண்டைய கிரேக்க நாட்டில் ஸ்காமண்டர் நதியில் திருமணத்திற்கு முன்பு கன்னிப் பெண்கள் சென்று நீராடிவிட்டு ‘ஸ்காமண்டரே எங்களுடைய கன்னித்தன்மையை ஒத்துக்கொள்’ என்று கூறுவராம்.நிலத்தை ஈரப்பதமாக்கும், மழைநீருக்கு உயிரூட்டும் சக்தி பெற்றிருப்பதாக நம்பினர். குருதி, வியர்வை, விந்து ஆகியவற்றுடன் நீரையும் ஒப்பிட்டு நோக்கினர். இவையனைத்தும் உயிர்ச்சக்தியைப் பெற்றனவாகும். ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவர்கள் நீரையும், தந்தையையும் ஒரே சொல்லால் வழங்கினர். இவர்களில் அஷந்தி கூட்டத்தினர் தங்கள் தந்தை வழி மரபினரை, “என்டோரா’’(ntora) என்ற பெயரில் அழைத்தனர். பாப்புவா தீவுகளைச் சேர்ந்தவர்கள், தந்தைவழி மரபினரை “டேன்’’(dan) என்ற பெயரில் அழைத்தனர். இச்சொற்கள் இரண்டும் நீரையும், விந்தையும் குறித்தன.நீருக்குத் தூய்மையாக்க ஆற்றல் இருப்பதனை நம்பிய மனிதன், தூய்மைச் சடங்குகளுக்கும் இதனைப் பயன்படுத்தினான். கிறித்துவ சமயச் சடங்குகளில் காணப்படும் ‘ஞானஸ்நானம்’ எனும் சடங்கு இந்நம்பிக்கையைப் புலப்படுத்துகிறது. `நைல்’ நதியில் ஒவ்வொரு முறை வெள்ளம் வரும் போது அதனை அடுத்த ஆண்டின் தொடக்கமாக எகிப்தியர்கள் கணக்கிட்டனர். நைல் நதியினைக் கவனிப்பதனைப் பெரிய திருச்சபையின் குருமார்கள் தம் கடமையாகக் கொண்டிருந்தனர். எகிப்திய கோவில் மதில்களில், நீர் அளவுகளைக் குறிக்க இந்த குருமார்கள் சிறிய கோடுகளை வரைந்திருந்தனர். இக்கோடுகளைக் கோவில் மதில்களில் இன்றும் காணலாம். நதியை எகிப்தியர் கடவுளாகக் கருதியதால்தான், குருமார்களின் பொறுப்பில் நதியின் கண்காணிப்புப் பணியைக் கொடுத்திருந்தனர்.தமிழகத்திலும் ‘புண்ணிய நீராடல்’ ஒரு சமயச் சடங்காகக் கருதப்படுகிறது. நதிகளைப் புண்ணியத் தீர்த்தங்களாகக் கருதும் போக்கு, இந்து சமயத்தில் காணப்படுகிறது. ஆடித்திங்களில், பதினெட்டாம்பெருக்கு அன்று காவிரி நதியின் கரைகளில் பெண்கள் விளக்கேற்றி வைத்து, ஓடி வரும் புது நீரில் அவற்றை விட்டு வழிபடுகின்றனர். மற்ற ஆறுகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்தோடும் காலங்களில், ஆற்றுத் தெய்வங்களை வழிபடுவது மரபு. இவ்வாறு வழிபடுவதனால், நீர்வளம் பெருகி நாடு செழிக்கும் என்பது நம்பிக்கை.இந்தியாவில் ஆறுகளின் பெயர்களை கங்கா, யமுனா, காவேரி என்று பெண்பாற் பெயர்களால் அழைக்கின்றனர். தமிழகக் கிராமங்களில் பெரிதும் நடைபெறும் அம்மன் வழிபாடு, மழை வேண்டும் மாரி வழிபாடேயாகும். இவ்வழிபாட்டின் இடம்பெறும் `கரகம்’ அம்மனாகக் கருதப்படும். கரகத்தில் ஆற்றுநீரினை நிரப்பி இதனையே கடவுளாகக் கருதி வழிபடுகின்றனர். கரகத்தையும் முளைப்பாலிகைகளையும் விழா முடிவில் ஆறு அல்லது குளத்தில் மூழ்கடித்து விடுவதும், மேற்காட்டிய கருத்திற்கு அரண் சேர்ப்பதாகும்.நெருப்புநெருப்பு, மனிதனை விலங்கிடமிருந்து பிரித்து உணவு நாகரிகத்தை தோற்றுவித்தது. இதனால், மனித வாழ்க்கைக்கு இன்றியமையாததாகவும் தீ மூட்டுவது கடினமாகவும் இருந்ததால், இதனைக் கடவுளாகக் கருதிப் போற்றி வந்தனர். நெருப்பைப் பற்றிய தொன்மக் கதைகள் பல உலகெங்கும் வழங்கி வருகின்றன. இக்கதைகள் எல்லாவற்றிலும் தற்செயலாகவோ அல்லது மனித சக்திக்கு அப்பாற்பட்ட வழியிலோ மனிதன் தீயைப் பெற்றான் என்ற செய்தி காணப்படுகிறது. தீயைக் கடவுளின் கொடையாகவும், கடவுளின் பிரதிநிதியாகவும் பழங்குடி மக்கள் நம்பினர். பண்டைய ஆரியரும், கல்தேயரும்(Chaldeans) பினீசியரும் நெருப்பை வழிபட்டனர். இந்துக்களும், பார்சிகளும் தீயின் மூலமாகத் தங்கள் பலிப் பொருட்கள் இறைவனைச் சென்று சேர்வதாக நம்பினர். இந்நம்பிக்கை இன்றும் நிலவுகிறது.(தொடரும்)பேரா.முனைவர் தே.ஞானசேகரன்…