மேட்டுப்பாளையம், நவ.22: மேட்டுப்பாளையம் அருகே உள்ள சமயபுரம் பகுதியில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதி அடர்வனப்பகுதியை ஒட்டியிருப்பதால் அவ்வப்போது காட்டு யானை, மான், காட்டுமாடு உள்ளிட்ட பல்வேறு வகை வனவிலங்குகள் ஊருக்குள் நுழைந்து விளை நிலங்களை சேதம் செய்வதோடு, மனிதர்களையும் அவ்வப்போது அச்சுறுத்தி வருகின்றன. இந்த நிலையில் நேற்றிரவு கூட்டத்திலிருந்து பிரிந்த ஒற்றைக்காட்டு யானை பவானி ஆற்றில் தண்ணீர் அருந்திவிட்டு பின்னர் அங்கிருந்து சாமியார் தோட்டம் வழியாக சமயபுரம் வந்தது.
பின்னர், அங்குள்ள தனியார் பெட்ரோல் பங்க் வழியாக சாலையில் ஹாயாக நடந்து சென்று பின்னர் வனப்பகுதியின் மற்றொரு புறம் கடந்து சென்றது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சியில் பயந்து ஓடினர். மேலும், அவ்வழியாக வந்த பக்தர்களும் தங்களது வாகனங்களை ஆங்காங்கே நிறுத்திவிட்டு யானை சாலையை கடந்து செல்லும் வரை நின்று பின்னர் சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.