வாடிப்பட்டி, நவ. 13: பரவை அருகே சத்தியமூர்த்தி நகர் பகுதியில் குறிப்பிட்ட இனத்தை சேர்ந்த மக்கள் தங்களுக்கு பழங்குடியினர் சான்று வழங்க கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மதுரை அருகே பரவை பேரூராட்சியில் உள்ள சத்தியமூர்த்தி நகரில், சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட குறிப்பிட்ட இன மக்கள் வசித்து வருகின்றனர். கடந்தாண்டு வரை இவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு பழங்குடியினர் என சான்று பெற்று வந்துள்ளனர்.
தற்போது மாவட்ட நிர்வாகம் இவர்கள் பழங்குடியினத்தை சேர்ந்தவர்கள் அல்ல என்று கூறி, சான்று வழங்க மறுப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து சத்தியமூர்த்தி நகரை சேர்ந்த சம்பந்தப்பட்ட இனத்தை சேர்ந்தோர் என கூறும் பொதுமக்கள், தங்களது குழந்தைகள் நூற்றுக்கும் மேற்பட்டோரை பள்ளிகளுக்கு அனுப்பாமல், கிராம மந்தையில் அமர வைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
6வது நாள் போராட்டத்தின் போது சத்தியமூர்த்தி நகர் பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவ மாணவியர், பொதுமக்கள் என சுமார் 600க்கும் மேற்பட்டோர் ஒரு காலத்தில் தாங்கள் வேட்டைக்கு பயன்படுத்திய இடுக்கி, வலை, கிண்டி உள்ளிட்ட பொருட்களை காட்சிப்படுத்தி தங்களது போராட்டத்தை தொடர்ந்தனர்.
மேலும் போராட்ட களத்திலேயே மாணவர் மற்றும் பொதுமக்களுக்கு சாலையோரம் உணவும் தயார் செய்யப்பட்டு மதுரை திண்டுக்கல் நெடுஞ்சாலையின் ஓரமாக அமர வைத்து அனைவருக்கும் உணவு பரிமாறப்பட்டது. தொடர்ந்து தங்களுக்கு சாதி சான்றிதழ் கிடைக்கும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை என தெரிவித்துள்ள மக்கள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று தங்களது ரேஷன் கார்டு உள்ளிட்ட அரசு சான்றிதழ்களை திருப்பி ஒப்படைக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.