சீர்காழி, செப்.5: சீர்காழி அருகே மங்கைமடத்தில் அமைக்கப்பட்ட வேகத்தடையில் வெள்ளை வண்ணம் பூச வேண்டும் என்று வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே மங்கைமடம் கடைவீதியில் சீர்காழி, பூம்புகார், திருநகரி ஆகிய பகுதிகளுக்கு செல்லும் மூன்று சாலைகள் ஒரே இடத்தில் சந்திக்கின்றன. இந்த பகுதியில் மாணவ, மாணவிகள் பொதுமக்கள் வியாபாரிகள் அதிக அளவில் வந்து செல்கின்றனர். மூன்று சாலைகள் அமைந்துள்ள இடத்தில் வாகனங்கள் அதி வேகமாக சென்று வருவதால் விபத்துக்கள் அதிகளவில் நடந்து வந்தன. இதனைத் தொடர்ந்து மூன்று சாலைகள் சந்திக்கும் இடத்தில் வேகத்தடை அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்த நிலையில் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது.
இதனால் விபத்துக்கள் குறைந்து உள்ளது. பொதுமக்களும் அச்சமின்றி சாலையை கடந்து வருகின்றனர். ஆனால் வேகத்தடையில் பூசிய வெள்ளை வர்ணம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அழிந்து விட்டது. இதனால் வேகத்தடை இருப்பது தெரியாமல் வேகமாக செல்லும் விபத்துக்குள்ளாகி வருகிறது. வாகனங்கள் வேகமாக செல்வதால் பொதுமக்களும் அச்சத்துடன் சாலையை கடக்கும் நிலை இருந்து வருகிறது. எனவே விபத்துக்களை தடுக்கும் வகையில் வேகத்தடையில் நெடுஞ்சாலைத் துறையினர் கரையாத படி ஒளிரும் வெள்ளை வண்ணம் பூச வேண்டும். மேலும் வேகத்தடை குறித்த அறிவிப்பு பலகை அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.