ராமநாதபுரம், மே 29: ராமநாதபுரம் மாவட்டத்தில் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள சமையல் உதவியாளர் பணிக்கு 2,728 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் 1,132 பேர் நேர்முக தேர்வில் பங்கேற்றனர். ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள கடலாடி, முதுகுளத்தூர், கமுதி, பரமக்குடி, போகலூர், நயினார்கோயில், ஆர்.எஸ்.மங்கலம், திருவாடானை, ராமநாதபுரம், திருப்புல்லாணி மற்றும் மண்டபம் ஆகிய 11 ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் ராமநாதபுரம், பரமக்குடி நகராட்சி பகுதிகளில் உள்ள பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 187 சமையல் உதவியாளர் காலிபணியிடங்களுக்கு நேரடி நியமனம் செய்வதற்கான அறிவிப்பு கடந்த ஏப்.10ம் தேதி வெளியிடப்பட்டது. விண்ணப்பிக்க ஏப்.26 ம்தேதி கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டது.
இதில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மற்றும் தோல்வியடைந்த பெண்களுக்கு சில விதிமுறைகளுடன் தகுதி நிர்ணயிக்கப்பட்டது. அதன்படி மாவட்டத்தில் 2,728 பெண்கள் விண்ணப்பித்தனர். தகுதி அடிப்படையில் 1,344 விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இவர்களுக்கு நேர்முக கடிதம் அனுப்பப்பட்டது. இவர்களுக்கு மே 14ம் தேதி முதல் நேற்று வரை விண்ணப்பங்களுக்கு ஏற்றவாறு யூனியன் மற்றும் நகராட்சி அலுவலகங்களில் நேர்காணல் நடந்தது. இதில் 212 பேர் ஆப்சென்ட ஆன நிலையில் 1,132 பேர் நேர்முக தேர்வில் பங்கேற்றனர்.
கலெக்டரின் நேர்முக உதவியாளர் தலைமையிலும் அந்தந்த யூனியன் பிடிஓகள், நகராட்சி கமிஷனர்கள், அந்தந்த பகுதி தாசில்தார்கள் அல்லது தலைமையிடத்து துணை தாசில்தார்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் முன்னிலையில் நேர்முக தேர்வு நடந்தது. நேர்முக தேர்வில் பங்கேற்ற பெண்களின் பள்ளி மாற்றுச்சான்று, மதிப்பெண் சான்று, குடும்ப அட்டை ஆதார், சாதிசான்று உள்ளிட்ட ஆவணங்கள் மற்றும் ஆதரவற்ற விதவை, கணவரால் கைவிடப்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் சான்று போன்ற ஆவணங்கள், சான்றுகள் சரிபார்ப்புடன் நேர்காணல் நடத்தப்பட்டது. தேர்ச்சி பெற்றவர்களுக்கு விரைவில் பணி நியமன ஆணை வழங்கப்பட உள்ளது. கடலாடி யூனியன் அலுவலகத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் முத்துமாணிக்கம், பிடிஓ சங்கரபாண்டியன், தலைமையிடத்து தாசில்தார் சசிகலா, துணை பி.டி.ஓ ஜோதிமாணிக்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.