புதுக்கோட்டை, ஆக. 31: புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் 500க்கும் மேற்பட்டோர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நூதன முறையில் மடியேந்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், காலை உணவு வழங்கும் திட்டத்தை தனியாருக்கு தாரை வார்ப்பதை நிறுத்திவிட்டு, அனைத்து பள்ளிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும், இப்பணியை சத்துணவு ஊழியர்களிடம் வழங்க வேண்டும், தமிழ்நாடு அரசின் நிரந்தர திட்டத்தில் பணியாற்றக்கூடிய சத்துணவு ஊழியர்கள் அனைவரையும் முழுநேர அரசு ஊழியர்களாக அறிவித்து வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், ஓய்வுபெறும் சத்துணவு ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஒட்டுமொத்த தொகை அமைப்பாளர்களுக்கு ரூ.5 லட்சமும், சமையல் உதவியாளர்களுக்கு தலா ரூ.3 லட்சமும் வழங்க வேண்டும், ஓய்வு பெறும் சத்துணவு ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம், குடும்பப் பாதுகாப்புடன் கூடிய ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும், சத்துணவு மையங்களில் உள்ள காலிப் பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் உடனடியாக நிரப்ப வேண்டும், சத்துணவு மையத்துக்கு வழங்கப்படும் எரிவாயு சிலிண்டரை அரசே நேரடியாக வழங்க வேண்டும், தமிழ்நாடு அரசு பெண் ஊழியர்களுக்கு சம்பளத்துடன் 12 மாதம் மகப்பேறு விடுப்பு வழங்குவது போல் சத்துணவு ஊழியர்களுக்கும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.