கிருஷ்ணகிரி, ஆக.6: கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பில் பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டம் நடந்தது. கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பில், கோரிக்கையை வலியுறுத்தி பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட தலைவர் சீனிவாசன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் சூடநாதன், வெங்கடகிரியப்பா, கணேசமூர்த்தி, சுசீலா, பெருமாள், ருக்மணி, கிருஷ்ணப்பாகவுடு, கிருஷ்ணன், முனுசாமி, ராமதாஸ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். சத்துணவு ஊழியர் சங்க முன்னாள் மாவட்ட செயலாளர் மதியழகன் நிறைவுரை ஆற்றினார். மாவட்ட பொருளாளர் பொன்னுசாமி நன்றி கூறினார்.
ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட தலைவர் சீனிவாசன் பேசுகையில், ‘40 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி ஓய்வு பெற்ற சத்துணவு ஊழியர்களுக்கு, கடந்த 7 ஆண்டு காலமாக ஓய்வூதிய தொகை உயர்த்தப்படவில்லை. தமிழக முதல்வர் வரும் சுதந்திர தின விழாவில், ஓய்வு பெற்ற சத்துணவு ஊழியர்களுக்கு, ஓய்வூதியமாக ₹6,750 மற்றும் அதற்குண்டான அகவிலைப்படியுடன் கூடிய ஓய்வூதியம் வழங்க வேண்டும்,’ என்றார்.