பரமக்குடி,ஆக.26: சத்திரக்குடி வட்டாரத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் விவசாயிகளுக்கு வேளாண் சாகுபடி தொழில்நுட்பங்கள் மற்றும் மானிய திட்டங்கள் தொடர்பான பயிற்சி வழங்கப்பட்டது. மண் வளம் பாதுகாப்பு மற்றும் ரசாயன உரமிடல் முறைகள், விதை சான்று மற்றும் அங்ககச் சான்று பதிவு மற்றும் இயற்கை வேளாண்மை, விதைப்பண்ணை பதிவு செய்யும் முறைகள், இயற்கை முறையில் ரசாயன உரங்களை தவிர்த்து சாகுபடி செய்யும் முறைகள். கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் வழங்கப்படும் மானியங்கள் குறித்த விவசாயிகளுக்கு விளக்கம் மற்றும் பயிற்சிகள் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் வேளாண்மை உதவி இயக்குநர் நாகராஜன், அங்கக சான்று உதவி இயக்குனர் சிவகாமி, விதைச்சான்று அலுவலர் வீரபாண்டி, சத்திரக்குடி வேளாண்மை உதவி இயக்குநர் ராஜேந்திரன், சத்திரக்குடி வேளாண்மை அலுவலர் சுமிதா ஆகியோர் கலந்து விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தனர். வட்டார தொழில்நுட்ப மேலாளர் சுகன்யா நெல் விதை கடினப்படுத்துதல்,பேசிலஸ் சப்டிலிஸ் நெல் விதை நேர்த்தி மற்றும் உயிர் உரங்கள் விதை நேர்த்தி செயல் விளக்கங்களை விவசாயிகளுக்கு செய்து காண்பித்தார்.
பரமக்குடி நடமாடும் மண் பரிசோதனை நிலையம் மூலம் வீரவனூர் மற்றும் வைரவனேந்தல் கிராமத்தில் முகாமிட்டு கிராம வேளாண் முன்னேற்ற குழு விவசாயிகளின் வயல்களில் இருந்து மண் மாதிரி சேகரிக்கப்பட்டு மண் பரிசோதனை செய்து மண்வள அட்டைகள் வழங்கப்பட்டது. இம்முகாமில் கால்நடை மருத்துவர் ரஜினி, துணை வேளாண்மை அலுவலர் வித்யாசாகர், உதவி வேளாண்மை அலுவலர் ஜெயசங்கர், வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை உதவி வேளாண்மை அலுவலர் பிரேம்குமார் மற்றும் அட்மா திட்டத்தின் உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் சந்திரகுரு, காயத்ரி ஆகியோர் கலந்து கொண்டனர்.