சத்தியமங்கலம், ஜூலை 31: ரீடு தொண்டு நிறுவனம் குழந்தைகள், பெண்கள் மற்றும் சமுதாயத்தில் பின்தங்கிய மக்களுக்கு கல்வி மற்றும் பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைய வேண்டி பல்வேறு செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றது. நேற்று சத்தியமங்கலம் பஸ் நிலையம் அருகே உள்ள ஜே.டி.பார்க் ஹாலில் உலக மனித கடத்தல் நாளையொட்டி பல்வேறு வகையான மனித கடத்தலை கருத்துரை மூலமும், நாடகத்தின் மூலமும் விழிப்புணர்வு வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியின் நோக்கத்தை பற்றி ரீடு நிறுவனத்தின் இயக்குனர் கருப்புசாமி பேசினார். நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர்கள் ஆனைக்கொம்பு ஸ்ரீராம், சுந்தரம் மஹால் சுந்தரம், விதைகள் வாசகர் வட்டம் சங்கரேஸ்வரர், பரமேஸ்வரன், சின்ராஜ், பாலு, தியாகு, மூர்த்தி, புவனேஷ் வள்ளுவன், ஜான் பிரிட்டோ பள்ளி தலைமை ஆசிரியர் சகோதரி சகாய மேரி ஆகியோர் கருத்துரை வழங்கினர். இதைத்தொடர்ந்து ஈரோடு நாடக கொட்டகை குழுவினர் சதீஷ் தலைமையில் வெளி மாநில தொழிலாளர்கள் பற்றி நாடகம் நடித்துக் காட்டினர். ரீடு நிறுவனத்தின் கிராம வள மைய குழந்தைகள் நாடகம் மற்றும் பாடலின் மூலம் விழிப்புணர்வு வழங்கினர்.