வத்திராயிருப்பு, ஆக.4: ஆடிப்பெருக்கை முன்னிட்டு நேற்று சதுரகிரிகோயிலுக்கு, அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்து வந்த பக்தர்கள் தடுத்து நிறுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. வத்திராயிருப்பு அருகே, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு கடந்த 1ம் தேதி முதல் 5ம் தேதி வரை ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு, கடந்த மூன்று நாட்களாக பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். நேற்று ஆடிப்பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
இந்நிலையில் பக்தர்களின் வருகை அதிகமாக இருந்ததால் மதியம் 1:30 மணி வரை அனுமதி வழங்கப்பட்டது. அதற்கு பின்னர் வந்த பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் வனத்துறை கேட்டின் முன்பு சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனையடுத்து, மலையேற அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து பக்தர்கள், வனத்துறை கேட்டின் முன்பு தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் கேட் முன்பு தடுப்புகளை அமைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஏற்கனவே, காலை 6 மணி முதல் 12 மணி வரை மட்டுமே பக்தர்கள் கோயிலுக்கு செல்ல அனுமதி அளிக்கப்படும் என மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.