குடியாத்தம், ஆக.3: குடியாத்தத்தில் சட்ட விரோதமாக இயங்கிய மது பாரை போலீசார் நேற்று அதிரடியாக மூடினர். குடியாத்தம் அடுத்த வாரி நகரில் அரசு அனுமதி இல்லாமல் மது பார் இயங்கி வருவதாகவும், அங்கு டாஸ்மாக் மதுபாட்டில்கள் கூடுதல் விலைக்கு 24 மணி நேரமும் விற்பனை செய்யப்படுவதாகவும் எஸ்பி அலுவலகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, எஸ்பி மணிவண்ணன் உத்தரவின்பேரில் டிஎஸ்பி ரவிச்சந்திரன், டவுன் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி மற்றும் போலீசார் நேற்று இரவு மது பார் இயங்கி வரும் இடத்திற்கு சென்றனர். அப்போது, அங்கு மது குடித்துக்கொண்டிருந்த நபர்களை போலீசார் விரட்டி அடித்தனர். பின்னர், அங்கிருந்த கல் சுவற்றை உடைத்து சேதப்படுத்தினர். மேலும், அங்கிருந்த அடுப்பு, காஸ் சிலிண்டர், சமையல் பாத்திரங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். தொடர்ந்து, பார் உரிமையாளர்கள் ரமேஷ், மனோகரன் ஆகியோர் மீது வழக்குப் பதிந்து, தலைமறைவாக உள்ள இருவரையும் வலைவீசி தேடி வருகின்றனர். போலீசாரின் இந்த அதிரடி நடவடிக்கையால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.