தர்மபுரி, ஆக.24: தர்மபுரி மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொதுக்கணக்கு குழுவினர் கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பாலிடெக்னிக் கல்லூரி விடுதி வார்டன், சமையலரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்று குழுவின் தலைவர், கலெக்டரிடம் பரிந்துரைத்தார். தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது கணக்குக் குழுத் தலைவரும், ஸ்ரீபெரும்புதூர் எம்எல்ஏவுமான செல்வபெருந்தகை தலைமையில், குழு உறுப்பினர்களான திருச்செங்கோடு எம்எல்ஏ ஈஸ்வரன், பரமத்திவேலூர் எம்எல்ஏ சேகர், திருப்போரூர் எம்எல்ஏ பாலாஜி, தர்மபுரி எம்எல்ஏ வெங்கடேஸ்வரன் ஆகியோர், தர்மபுரி மாவட்டத்திற்கு நேற்று வருகை தந்தனர். அவர்களை கலெக்டர் சாந்தி வரவேற்றார். இக்குழுவினர் மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள், அடிப்படை வசதிகள், மேம்பாட்டு பணிகள் உள்ளிட்டவற்றை நேரில் பார்வையிட்டு, கள ஆய்வு மேற்கொண்டனர். காரிமங்கலம் வட்டம் பூமாண்டஅள்ளி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் உள்ள வகுப்பறைகள் மற்றும் ஆய்வகங்களை நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் போது, கல்லூரியின் புதிய கட்டிடத்தில் கீறல், வெடிப்பு இருந்தது. அதனை தரமாக கட்ட வேண்டும். சுவர் வெடிப்புகளை சரி செய்ய வேண்டும் என அறிவுறுத்தினர்.
பின்னர், கல்லூரி மாணவர் விடுதியை நேரில் பார்வையிட்டு, மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து ஆய்வு செய்தனர். அப்போது. சமையல் அறையில் இருந்த உணவின் மசாலாவில் பூண்டின் தோல் உறிக்காமல் முழுமையாக கிடந்தது. இதையடுத்து விடுதியின் வார்டன், சமையலரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்று குழுவின் தலைவர், கலெக்டரிடம் பரிந்துரை செய்தார். இதனை தொடர்ந்து, காரிமங்கலம் பஸ் ஸ்டாண்டில் இயக்கம் மற்றும் பராமரிப்பு நிதி திட்டத்தின் கீழ், ₹96 லட்சம் மதிப்பீட்டில் கடைகள், பொதுக்கழிப்பறை கட்டிடம், சைக்கிள் ஸ்டேண்ட் மற்றும் பயணியர் நிழற்கூடம் பராமரிப்பு பணிகள் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருவதையும், காரிமங்கலம் புதிய உழவர்சந்தையில் ₹75 லட்சம் மதிப்பீட்டில் உட்கட்டமைப்பு வசதி பணிகள் மேற்கொள்ளப்படுவதையும், ₹1.50 கோடி மதிப்பீட்டில், நவீன எரிவாயு தகன மேடை அமைக்கப்பட்டு வருவதையும், பொது கணக்குக் குழுவினர் நேரில் பார்வையிட்டு கள ஆய்வு மேற்கொண்டனர்.
பின்னர், தர்மபுரி நகராட்சி, சந்தை பேட்டையில் ₹2.50 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள நூலகம் மற்றும் அறிவுசார் மையம் கட்டுமானப்பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். நகராட்சி சந்தைபேட்டை பகுதியில் புதியதாக ₹1 கோடியில் கட்டப்பட்டு வரும் நவீன நூலக கட்டத்தை குழுவினர் ஆய்வு செய்தனர். தர்மபுரி உழவர் சந்தை அருகில், ₹3கோடி மதிப்பீட்டில் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய நிர்வாக அலுவலகம் மற்றும் கொள்முதல் உள்ளிட்ட அலுவலக கட்டுமான பணிகளை, பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பணிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் தரமாக முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினர். இந்த ஆய்வுகளின் போது, தர்மபுரி எம்எல்ஏ வெங்கடேஷ்வரன், தர்மபுரி ஆவின் பொது மேலாளர் மாலதி, தர்மபுரி ஆர்டிஓ கீதாராணி, பேரூராட்சிகள் உதவி இயக்குனர், காரிமங்கலம் பேரூராட்சி தலைவர் மனோகரன், செயல் அலுவலர் ஆயிஷா, வேளாண் விற்பனை குழு துணை இயக்குனர் பாலசுப்பிரமணியம், செயலர் ரவி, மாவட்டத்தில் பணிபுரியும் அனைத்து துறை தலைமை அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.