மல்லசமுத்திரம், ஏப்.21: காளிப்பட்டி கந்தசாமி கோயிலில் கும்பாபிஷேக விழா இன்று காலை விமரிசையாக நடக்கவுள்ளது. சேலம்-நாமக்கல் மாவட்ட எல்லையில் அமைந்துள்ள காளிப்பட்டி கந்தசாமி கோயில் கும்பாபிஷேக விழா இன்று காலை 9 மணிக்குமேல் 10.30 மணிக்குள் நடக்கிறது. முன்னதாக கடந்த 17ம் தேதி கிராம சாந்தியுடன் விழா தொடங்கியது. நேற்று முன்தினம் யாகசாலை பூஜைகள், கோ பூஜை, லட்சுமி சரஸ்வதி பூஜை மங்கள இசையுடன் தொடங்கியது. தொடர்ந்து நேற்று முதல் கால யாக பூஜைகள் தொடங்கி நடந்தது. மாலை 5.30 மணிக்கு பாலகணபதி பூஜை, காயத்ரி மந்திரம் நடந்தது.
அதை தொடர்ந்து, இன்று காலை 9.35 மணிக்கு ராஜகோபுரம், கோபுர கலசங்களுக்கும் திருக்குட நன்னீராட்டு விழா, கருவறையில் மூலவருக்கு திருக்குட நன்னீராட்டு, மங்கள ஆரத்தி நடக்கிறது. தொடர்ந்து, காலை 10.45 மணிக்கு மேல் அன்னதானம் நடக்கிறது. மதியம் 2.45 மணிக்குமேல் உற்சவர் சுப்ரமணியர் வள்ளி தெய்வானை தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை பூஜை நடைபெறுகிறது. மாலை 6.30 மணிக்குமேல் சுவாமிக்கு திருக்கல்யாண வைபவம், சுவாமி திருவீதி உலா நடக்கிறது. கும்பாபிஷேக விழாவை சங்ககிரி படைவீடு நடராஜ சிவாச்சாரியார் நடத்தி வைக்கிறார். விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் கிருஷ்ணன், பரம்பரை அறங்காவலர் சந்திரலேகா செய்துள்ளனர்.