முத்துப்பேட்டை, அக். 20: சங்கேந்தி பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுவதால், 108 ஆம்புலன்ஸ் சேவை தொடங்க வேண்டும் என்று கலெக்டரிடம், ஊராட்சி தலைவர் மனு அளித்தார். முத்துப்பேட்டை அடுத்த சங்கேந்தி ஊராட்சி தலைவர் ஏ.கே.ராஜா வடசங்கேந்தி கிராமத்தில் நடந்த முகாமிற்கு வந்த மாவட்ட கலெக்டர் சாருயை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது, முத்துப்பேட்டை ஒன்றியத்தில் உள்ள சங்கேந்தி ஊராட்சி என்பது கிழக்கு கடற்கரை சாலையை உள்ளடக்கிய ஒரு பகுதியாகும்.
இப்பகுதி சாலையில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் மற்றும் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களை மீட்டு அனுப்ப முத்துப்பேட்டை அல்லது திருத்துறைப்பூண்டியிலிருந்து 108 ஆம்புலன்ஸ் வர காலதாமதம் ஏற்படுகிறது. இதேபோல இந்த பகுதி மக்களின் அவசர மருத்துவ உதவிகளுக்கும், அடிக்கடி 108 ஆம்புலன்ஸ் சேவை தேவைப்படுகிறது. எனவே ஊராட்சிக்கு என தனியாக 108ஆம்புலன்ஸ் சேவையை ஏற்படுத்தி தர வேண்டும். இவ்வாறு அவர் அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார். மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட கலெக்டர் சாரு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.