Sunday, April 14, 2024
Home » சங்கராபுரம் அருகே மெட்டல் டிடெக்டர் கருவியை பயன்படுத்தி நகை, பணம் கொள்ளையடித்தவர்கள் கைது

சங்கராபுரம் அருகே மெட்டல் டிடெக்டர் கருவியை பயன்படுத்தி நகை, பணம் கொள்ளையடித்தவர்கள் கைது

by Karthik Yash

சங்கராபுரம், மார்ச் 6: கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே உள்ள சவுந்தரவல்லிபாளையம் கிராமத்தை சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் அருள்ஜோதி என்பவர் கடந்த மாதம் 15ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு தன்னுடைய மகளின் வளைகாப்பு நிகழ்ச்சிக்கு புதுச்சேரிக்கு சென்றுவிட்டு திரும்பி வந்து பார்க்கும்போதுவீட்டின் ஜன்னல் கதவுகள் உடைந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவை உடைத்து அதிலிருந்த 67 பவுன் தங்க நகை, 23 லட்சம் பணத்தை கொள்ளையர்கள் திருடிச் சென்றுள்ளதாக வீட்டின் உரிமையாளர் அருள்ஜோதி சங்கராபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அப்புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சமய்சிங்மீனா உத்தரவின் பேரில் திருக்கோவிலூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் மனோஜ்குமார் தலைமையில் நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில், நேற்று திருவண்ணாமலை செல்லும் சாலையில் பாக்கம்புதூர் கூட்ரோட்டில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது சந்தேகத்திற்கு இடமாக இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேரை பிடித்து விசாரித்ததில் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கூவாகம் கிராமத்தை சேர்ந்த ரகு மகன் உதயா (27), விழுப்புரம் மாவட்டம் வளவனூர் கிராமத்தைச் சேர்ந்த கோபால் மகன் மாரிமுத்து (30) என்பது தெரியவந்தது. விசாரணையின்போது முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறியதால் சந்தேகம் அடைந்த தனிப்படை போலீசார் இருவரையும் சங்கராபுரம் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தபோது சவுந்தரவல்லி பாளையம் கிராமத்தில் அருள்ஜோதி வீட்டில் திருடியதை ஒப்புக்கொண்டனர்.

அவர்கள் குறிப்பாக ஆளில்லா வீடுகளை நோட்டமிட்டு திருட்டில் ஈடுபட்டு வந்ததாகவும், கொள்ளை சம்பவத்தில் ஈடுபடும்போது மெட்டல் டிடெக்டர் கருவி கொண்டு திருட்டில் ஈடுபட்டதாக தெரியவந்துள்ளது.
இந்நிலையில் அவர்களிடமிருந்து 25 பவுன் தங்க நகை, 2 லட்சத்து 19 ஆயிரம் ரூபாய் ரொக்க பணத்தை போலீசார் கைப்பற்றினர். மேலும் மாரிமுத்து மற்றும் உதயா இருவர் மீதும் 15க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கொலை, கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் தலைமறைவாக உள்ள ராஜசேகர், திப்புசுல்தான் ஆகியோரை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் குறிப்பாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வாழும் பொதுமக்கள் வீட்டை பூட்டிவிட்டு வெளியூருக்கு செல்லும்போது காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சமய்சிங் மீனா கேட்டுக்கொண்டார்.

You may also like

Leave a Comment

16 − 10 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi