சங்கராபுரம், ஜூலை 4: சங்கராபுரம் அருகே வயதான தம்பதியை தனிஅறையில் கட்டிப்போட்டு தாக்கி 200 பவுன் தங்க நகைகளை 4 பேர் கும்பல் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள கடுவனூர் கிராமத்தில் வசித்து வருபவர் கேசவ வர்மன் (47). இவர் கடந்த 15 ஆண்டுகளாக துபாயில் இன்ஜினீயராக பணியாற்றி வருகிறார். இவரது குடும்பத்துடன் வெளிநாட்டில் குடிபெயர்ந்து வசித்து வருகிறார். இந்த நிலையில் தனது இரண்டாவது மகளுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடத்துவதற்காக சில தினங்களுக்கு முன்பு தனது சொந்த ஊரான கடுவனூர் கிராமத்தில் உள்ள தனது சொந்த வீட்டிற்கு வந்துள்ளனர். வரும் ஜூலை 7ம்தேதி அன்று தனது மகளுக்கு மஞ்சள் நீராட்டு விழா நிகழ்ச்சி நடைபெற இருந்த நிலையில் தனது குடும்பத்தினரின் பாஸ்போர்ட்டை புதுப்பிப்பதற்காக கேசவ வர்மன் மற்றும் அவரது குடும்பத்தினர் நேற்று முன்தினம் மாலை சென்னைக்கு சென்றுள்ளனர்.
இதனால் வீட்டில் கேசவ வர்மனின் வயதான பெற்றோர் முனியன்(80), பொன்னம்மாள்(75) ஆகியோர் மட்டும் தனியாக இருந்துள்ளனர். இதனை நோட்டமிட்ட 4 மர்ம நபர்கள் அதிகாலை 2 மணியளவில் முகத்தை துண்டு மற்றும் கர்ச்சிப்பால் மூடியநிலையில் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். பின்னர் கேசவ வர்மன் தந்தை முனியன் மற்றும் தாய் பொன்னம்மாள் ஆகியோரை தாக்கிய கொள்ளை கும்பல், தனிஅறையில் கட்டிப்போட்டு, கடந்த 1ம்தேதி வங்கி லாக்கரில் இருந்து எடுத்துவந்த நகைகள் எங்கே எனக்கூறி, பீரோ சாவியை கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது.
சாவியை கொடுக்க மறுக்கவே, அங்கிருந்த தலையணையை எடுத்து 2 பேரின் முகத்தையும் மர்ம நபர்கள் அழுத்தவே, உயிருக்கு பயந்த தம்பதி சாவியை கொள்ளை கும்பலிடம் கொடுத்துள்ளனர். இதையடுத்து பீரோவை திறந்து நகைகளை தேடிய கும்பல், லாக்கரையும் உடைத்து அதிலிருந்த 200 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டனர். பின்னர் கூச்சலிடட தம்பதி, உடனடியாக தனது மகனுக்கு செல்போனில் தகவல் கொடுத்தனர். தங்களை கொள்ளை கும்பல் தாக்கி நகைகளை அள்ளிச் சென்று விட்டதாக கூறவே அதிர்ச்சியடைந்த கேசவ வர்மன் உடனே சங்கராபுரம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார்.
அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த இன்ஸ்பெக்டர் விநாயக முருகன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் பிரபு, தனிப்பிரிவு காவலர் இளந்திரையன் உள்ளிட்டோர் கொள்ளை நடந்த வீட்டை நேரில் பார்வையிட்டனர். அப்போது கேசவ வர்மன் வீட்டின் படுக்கை அறையிலும், பீரோவிலும் துணிமணிகள், பொருட்கள் சிதறிக் கிடந்தன. இதையடுத்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் பதிவு செய்யப்பட்டன. அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களும் ஆய்வு செய்யப்பட்டன. இதனிடையே மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரஜத சதுர்வேதியும் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டார்.
பின்னர் மோப்பநாய் வரவழைக்கப்பட்ட நிலையில், அது கொள்ளை நடந்த வீட்டிலிருந்து சிறிதுதூரம் ஓடி நின்றது.
ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. சுமார் 1.50 கோடி மதிப்பிலான நகைகளை கொள்ளையடித்துச் சென்ற கும்பலை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். வெளிநாட்டில் இருந்து சொந்த ஊர் திரும்பிய கேசவ வர்மன், கடந்த 1ம்தேதி அங்குள்ள ஒரு தனியார் வங்கியின் லாக்கரில் இருந்த தனது 200 பவுன் நகைகளை எடுத்து வீட்டிற்கு எடுத்து வந்திருந்த நிலையில் இந்த துணிகர சம்பவம் நடந்துள்ளதால் சந்தேகத்தின்பேரில் சிலரை பிடித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இதில் துப்புதுலங்கும் பட்சத்தில் விரைவில் குற்றவாளிகள் சிக்குவர் என்று தெரிகிறது. வயதான தம்பதியை அடித்து மிரட்டி அறையில் பூட்டி வைத்து, 200 பவுன் நகையை மர்ம கும்பல் கொள்ளையடித்து சென்ற சம்பவம் சங்கராபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.