சங்கராபுரம், செப். 6: கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள வடபொன்பரப்பி பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் தனகோட்டி(68). இவர் கடந்த 1ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு தனது மகளை பார்க்க சென்று விட்டு, மீண்டும் நேற்று வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ திறந்திருந்து, அதில் இருந்து பொருட்கள் சிதறி கிடந்தது. இது குறித்து வடபொன்பரபப்பி போலீசாருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து சம்பவ இடத்திற்கு சப்-இன்ஸ்பெக்டர் ஏழுமலை மற்றும் போலீசார் சென்று விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து திருக்கோவிலூர் டிஎஸ்பி பார்த்திபன், சங்கராபுரம் இன்ஸ்பெக்டர் விநாயகமுருகன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
இதில் வீட்டில் இருந்த 9 பவுன் நகை, அரை கிலோ வெள்ளி, ரூ.15 ஆயிரம் ரொக்கம் உள்ளிட்டவைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜவேலு, ஜெயசங்கர் ஆகியோர் தலைமையிலான கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்தனர். மோப்ப நாய் ராக்கி வரவழைக்கப்பட்டது. அது கொள்ளை நடந்த வீட்டில் இருந்து அப்பகுதி தெரு வழியாக ஓடி விவசாய நிலத்தில் நின்றது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. வீட்டில் உள்ளவர்கள் வெளியில் சென்றதை நோட்டமிட்ட மர்ம நபர்கள், வீட்டின் பின்பக்க பூட்டை உடைத்து கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது. இது குறித்த புகாரின்பேரில், போலீசார் வழக்கு பதிந்து கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.