சங்கரன்கோவில்,நவ.4: சங்கரன்கோவிலில் மழைக்காலங்களில் மின்மாற்றிகளில் ஏற்படக்கூடிய பிரச்சனைகளை சரி செய்வது தொடர்பாக மின் மாற்றி பாதுகாப்பு நில இணைப்பு அமைத்தல் மற்றும் மின்னல் தடுப்பு காப்பான் அமைக்கும் முறை, மின் மாற்றி திறன் மேம்படுத்தல் நேரடி செயல்முறை பயிற்சி வகுப்பு நடைபெற்றது. நெல்லை தொழில்நுட்ப பயிற்சி மற்றும் மேம்பாட்டு பிரிவு சார்பில் ராஜபாளையம் சாலை கனரா வங்கி எதிர்புறம் அமைந்துள்ள 500 கேவி திறன் மின் மாற்றியில் செயல்முறை பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சி வகுப்பினை நெல்லை தொழில் நுட்ப மேம்பாட்டு பொறியாளர் முருகன், ராமசுப்பு ஆகியோர் துவக்கி வைத்தனர். இதில் மழைக்காலங்களில் ஏற்படக்கூடிய பிரச்சனைகளை சரி செய்ய மின்வாரிய களப்பணியாளர்கள், மேற்பார்வையாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. ஏற்பாடுகளை செயற்பொறியாளர் கருப்பசாமி மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.