சங்ககிரி, ஜூலை 3: சங்ககிரி மார்க்கமாக வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ள நிலையில், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் இடையூறின்றி தண்டவாளத்தை கடந்து செல்ல பாலங்கள் அமைப்பது தொடர்பாக அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர். சென்னையில் இருந்து கோவை வரை வந்தே பாரத் இயக்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனையொட்டி, வழிநெடுகிலும் பாதுகாப்பு நடவடிக்கையாக தண்டவாள பகுதிகளில் தடுப்பு வேலி அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. சேலம் மாவட்டம் சங்ககிரி ரயில்வே வழித்தடத்தில் வடுகப்பட்டி ஊராட்சி வேப்பம்பட்டி, ஆயக்காடு, மற்றும் மோரூர் மேற்கு ஊராட்சி தட்டாங்காடு உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் இடையூறின்றி தண்டவாளத்தை கடந்து செல்ல பாலங்கள் அமைக்க வேண்டுமென பொதுமக்க்ள கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதுதொடர்பாக, சேலம் கோட்ட ரயில்வே துறையினர் மற்றும் சங்ககிரி தாசில்தார் வாசுகி உள்ளிட்ட வருவாய்த்துறையினர், ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் முத்துசாமி, பிடிஓ சீனிவாசன் உள்ளிட்ட ஊரக வளர்ச்சி துறையினர் இணைந்து, நேற்று ஆய்வுப்பணியில் ஈடுபட்டனர். அப்போது, தண்டவாளத்தை கடக்காத வகையில் கம்பி வேலி அமைத்து தடை ஏற்படுத்தும்பட்சத்தில் நீண்ட நேரம் சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்படும். எனவே, அந்தந்த பகுதியிலேயே தண்டவாளத்தை எளிதில் கடந்து செல்லும் வகையில், தரைமட்ட பாலங்கள் அமைக்க வேண்டுமென கிராம மக்கள் வலியுறுத்தினர். இதுகுறித்து உயரதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று, நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி கூறினர்.