Sunday, June 4, 2023
Home » சக்கரவர்த்தி திருமகன்

சக்கரவர்த்தி திருமகன்

by
Published: Last Updated on

நன்றி குங்குமம் ஆன்மிகம் முத்துக்கள் முப்பதுபாரதத்தின் இரண்டு முக்கியமான நூல்கள் ஸ்ரீராமாயணமும், மகாபாரதமும். ஸ்ரீராமாயணத்தை சகல வேத சாரம் என்று ஆன்றோர்கள் சொல்லுவார்கள். காயத்ரி மந்திரத்தின் 24 அட்சரங்களின் விரிவு தான் இராமாயணம். ஒரு அட்சரத்திற்கு ஆயிரம் ஸ்லோகங்கள் வீதம் 24 ஆயிரம் ஸ்லோகங்கள் கொண்டது ஸ்ரீராமாயணம் என்று பெரியவர்கள் சொல்லுவார்கள். ஆத்மாவை பரமாத்மாவிடம் சரணடையச் செய்துவிட்டால் அதற்குப் பிறகு அவனுக்கு எவ்விதமான துன்பங்களும் கிடையாது. அந்த ஆத்மாவுக்கு அடைக்கலமாக பெருமானே விளங்குவார் என்பதுதான் வேத நூல்களின் சாரமான கருத்து. அந்தக் கருத்து எல்லோருக்கும்  புரிய வேண்டும் என்பதற்காகத்தான் ஸ்ரீராமாயணம் இயற்றப்பட்டது. ஸ்ரீராமாயணத்தை, ‘‘சரணாகதி சாஸ்திரம்” என்று தான் பெரியவர்கள் கூறுகிறார்கள். 1. தாயிற் சிறந்த கோயில் இல்லைவேத இதிகாசங்களில் அடிப்படையான கருத்து ‘‘அன்னையும் தந்தையும் முன்னறி தெய்வம்” என்பதுதான். இது இந்திய நாட்டிற்கே உரிய அடிப்படையான விஷயம். மாதா, பிதா,  குரு, தெய்வம் என்று தமிழில் சொல்லப்பட்ட விஷயம், வடமொழியில் மாத்ரு  தேவோ பவ; பித்ரு தேவோ பவ ;ஆச்சார்ய தேவோ பவ ; என்று வருகிறது.தைத்ரிய உபநிஷத்தின் உயிர் வாக்கியம் இது. இந்த தர்மத்தின் முதல் சொல் மாதா தான்  தெய்வம் என்பது. தாயில் சிறந்த கோயில் இல்லை என்ற வாக்கியத்தின் படி நடந்தவன் ஸ்ரீராமன்.2. பகவானைப் பெற்றெடுத்த கோசலைஸ்ரீராமபிரான் கோசலையின் மணிவயிற்றில் பன்னிரண்டு மாதம் கர்ப்பவாசம் செய்து, இந்த புண்ணிய பூமியிலே, சித்திரை மாதம், வளர்பிறை நவமி நன்னாளில் அவதரித்தான். எல்லா நற்குணங்களையும் தன்னிடத்திலே பெற்றவள்  கௌசல்யா தேவி. வேதங்களால் அறிவதற்கு அருமையானவனும், கருமேகம் போன்ற நிறமும் மின்னலைப் போன்ற ஒளியும் படைத்த  பகவானை, எல்லா உலகங்களும் இம்மையிலும் மறுமையிலும் நன்மை பெறும்படியாக இந்த உலகத்தில் பெற்றெடுத்தாள் என்று பாடுகிறார். ஒரு பகல் உலகு எலாம் உதரத்துள் பொதிந்துஅரு மறைக்கு உணர்வு அரும் அவனை, அஞ்சனக்கரு முகில் கொழுந்து எழில் காட்டும் சோதியைத்திரு உறப் பயந்தனள் திறம் கொள் கோசலை3. தெய்வத்தை பயந்த தெய்வம்இதில் “திறன் கொள் கோசலை” என்கின்ற வார்த்தை மிக முக்கியமானது. ஒரு குழந்தையைப்  பெற வேண்டுமானால் அதற்கான திடமான ஆரோக் கியமும் பலமும் ஒரு தாய்க்கு இருக்க வேண்டும் ஒரே ஒரு சாதாரண குழந்தையைப்  பெறுவதற்கு இத்தனை திடகாத்திரம் தேவை என்று சொன் னால், உலகத்தை எல்லாம் தன்னுடைய உடலாகக்  கொண்ட  எம் பெருமானைப்  பெற்றெடுப்பதற்கு எத்தனை திடகாத்திரம் வேண்டும். கோசலை, சுமித்திரை, கைகேயி ஆகிய  மூன்று தாய்மார்களில்  இந்த   திடம் கோசலைக்கு இருந்ததால் பகவான் கோசலையின் மணி வயிற்றை தான் பிறப்பதற்கு ஏற்ற கருவறையாகத் தேர்ந்தெடுத்தார். பகவானைப் பெற்றெடுத்த கருவறையாக திருவயிரை உடையவள் என்பதால் தேவர்கள் அனைவரும் கோசலையை தெய்வத்தை பயந்த தெய்வமாகப் போற்றினர்.4. முதல்வனைப் பெற்றவள்குகனிடம் கோசலையை அறிமுகப்படுத்தும் போது பரதன் சொல்வான்.  ‘‘எல்லாஉலகங்களையும் யார் படைத்தவனோ, அப்படிப்  படைத்தவனையே தன் வயிற்றின் மூலம் படைத்த பெருமை உடையவள் கோசலை” சுற்றத் தார், தேவரொடும் தொழ நின்றகோசலையைத் தொழுது நோக்கி,‘கொற்றத் தார்க் குரிசில்! இவர் ஆர்?’ என்றுகுகன் வினவ, ‘கோக்கள் வைகும்முற்றத்தான் முதல் தேவி; மூன்று உலகும் ஈன்றானை முன் ஈன்றானைப்பெற்றத்தால் பெறும் செல்வம், யான்பிறத்தலால், துறந்த பெரியாள்’ என்றான்.5. கோசலை பெயர் சொல்லி ராமனுக்குத் தாலாட்டுகண்ணனுக்கு தாலாட்டு பாடல் உண்டு. ஆனால் இராமனுக்கு இல்லையே என்ற குறையைத்  தீர்த்து வைத்தவர் குலசேகர ஆழ்வார்.மன்னுபுகழ் கெளசலைதன் மணிவயிறு வாய்த்தவனேதென்னிலங்கை கோன்முடிகள் சிந்துவித்தாய் செம்பொஞ்சேர்கன்னிநன்மா மதிள்புடைசூழ் கணபுரத்தென் கருமணியேஎன்னுடைய இன்னமுதே இராகவனே தாலேலோஎன்று ராமனின் திருத்தாயாரான கோசலையின் பெருமையைக்  கூறி  திருக் கண்ணபுரம் பதிகத்தின்  தாலாட்டைத் தொடங்குகிறார்.6. கோசலையின் பெயரோடு சுப்ரபாதம்தாலாட்டு பாடிய குழந்தையை திரும்பவும் திருப்பள்ளி எழுச்சி பாடி எழுப்ப வேண்டும்.  திருப்பள்ளி எழுச்சிக்கு சுப்ரபாதம் என்று பெயர் அந்த சுப்ரபாதமும் கோசலையின் பெயரில்தான் தொடங்குகிறது என்பது கோசலைக்கும்  ராமனுக்கும் உள்ள தாய் மகன்  பிணைப்பை, பக்தி உலகம் எவ்வாறு போற்றுகிறது என்பதைக்  காட்டுகிறது. திருப்பள்ளி எழுச்சியின் முதல் வார்த்தையே கௌசல்யா சுப்ரஜா என்று தான் ஆரம்பிக்கிறது. கௌசல்யா சுப்ரஜா ராம பூர்வா ஸந்த்யா ப்ரவர்த்ததேஉத்திஷ்ட நர ஸார்தூல கர்த்தவ்யம் தைவமாஹ்நிகம்இன்றைக்கு பல்வேறு திருக்கோயில்களிலும் சுப்ரபாதங்கள் இசைக் கப்படுகிறது. அந்த சுப்ரபாதங்களின் முதல் ஸ்லோகம் பெரும்பாலும் இந்த ஸ்லோகமாகவே இருக்கும். “இன்று ஒருநாள், இந்த தெய்வக்குழந்தையை எழுப்பும் பேற்றினை நான் பெற்றேன். ஆனால், தினமும் இவனை எழுப்பும் பேற்றினை ராமனை பெற்ற கோசலை (கௌசல்யா) எத்தனை அரிய பேற்றினை பெற்றவள். 7. கோசலை ஒரு சிறந்த தாய்இறைவனே மகனாக அவதரித்தாலும் கூட, தாயின் கடமையாகிய தர்ம உபதேசத்தை செய்து கொண்டே இருக்க வேண்டும் என்று உலகத் தாய்மார்களுக்கு காட்டியவள் கோசலை. ராமன் காட்டுக்கு புறப்படும் போது அவள் ஒரு வார்த்தையை சொல்லுகின்றாள்.யம் பாலயஸி தர்மம் த்வம் திருத்யா ச  நியமேன ச |ஸவை ராகவசார்துல தர்மஸ்த்வாம் அபிரக்ஷது || “நீ தர்மத்தின் வழியில் நின்று, சத்தியத்தைக்  காப்பதற்காக இந்தக்  காரியத்தை செய்கிறாய்.மிகுந்த மகிழ்ச்சி. நீ எந்த தர்மத்தை காப்பாற்றுகிறாயோ, அந்த தர்மம் உன்னை காப்பாற்றும் (தர்மஸ்த்வாம் அபிரக்ஷது) என்று ஆசீர்வாதம் செய்து அனுப்புகின்றாள். பட்டத்தைத் துறந்து, தன்னுடைய மகன் காட்டுக்குச் செல்கின்றானே என்ற வேதனை ஒருபுறம் இருந்தாலும் கூட, அதனை வெளிக் காட்டாது ஆசீர்வதித்து அனுப்புகின்ற உறுதியான தாயின் கடமைக்கு அடையாளமாக  இங்கே கோசலையைப் பார்க்கிறோம்.8.எல்லோருக்கும் நல்ல உறவு ராமாயணத்தில் ராமனை நேசித்த அடுத்த தாய் சுமித்திரை. ஸு என்றால் நல்ல , மங்கலகரமான என்று பொருள். மித்ரா என்றால் உறவு. ஸு மித்ரா என்றால்  நல்ல உறவு என்று பொருள். யாரிடமும் பகைமை பாராட்டாத உயர்ந்த உள்ளம் கொண்டவள். கோசலையாவது தன்னுடைய மகன் காட்டுக்குப் போகிறானே என்று கொஞ்சம் தயங்கினாள். அந்த தயக்கத்தை அவளுடைய பேச்சிலிருந்து பார்க்கலாம். ஆனால் தசரதன் கைகேயிக்கு அளித்த வரங்களின்படி இராமன் 14 ஆண்டுகள் காட்டுக்குச் சென்றபோது எவ்வித சலனமும் இன்றித் தனது மகனான இலக்குமணன் இராமனுடன் கூடச் செல்வதை விரும்பியவள் சுமித்திரை. 9. ராமனிடம் கொண்ட அன்புஇரண்டு அற்புதமான பாடல்கள்.ஆகாதது அன்றால் உனக்கு -அவ் மனம் இவ் அயோத்தி;மா காதல் இராமன் நம்மன்னவன்; வையம் ஈந்தும்போகா உயிர்த் தாயர் நம்பூங் குழல் சீதை – என்றேஏகாய்; இனி, இவ் வயின்நிற்றலும் ஏதம்’ என்றாள்.அந்தக் காடு தான் உனக்கு அயோத்தி. ராமனே தசரத மன்னன். சீதையே உன்னுடைய தாய். இவ்வாறு எண்ணிக்கொண்டு ராமருடன் செல். இனி இங்கே ஒரு நொடி நிற்பதும் தாமதிப்பதும் குற்றம் என்று சொல்லி தன்னுடைய மகனை அனுப்புகிறாள் என்று சொன்னால் ராமனிடம் சுமித்திரை கொண்ட பேரன்பு எத்தகையது என்பது விளங்கும்.10. மனதில் தைத்த வாளை அகற்றினான்  அடுத்த பாடலிலே சொல்வது நம் மனதை உருக்கும். கண்ணீர் வரும். பின்னும் பகர்வாள், ‘மகனே!இவன்பின் செல்; தம்பிஎன்னும்படி அன்று, அடியாரினின்ஏவல் செய்தி;மன்னும் நகர்க்கே இவன்வந்திடின், வா; அது அன்றேல்,முன்னம் முடி’ என்றனள்,வார் விழி சோர நின்றாள்.மகனே, நீ ராமன் பின்னே செல். தம்பி என்னும் தகுதியானல்ல. ஒரு அடிமையாய் சொல். அவன் அயோத்திக்கு திரும்பி வந்தால் நீயும் அவனுடன் வா. அப்படி அவன் வரவில்லை என்று சொன்னால் அவனுக்கு முன்னர் நீ இறந்து போ” இதன்மூலம் ராமனிடத்திலே சுமித்திரை கொண்ட பேரன்பு எத்தகையது என்று தெரியும். ராமனும் அத்தகைய அன்பு உடையவன் தான். ராமன் காட்டுக்கு போவதை நினைத்து சோர்ந்து சுமித்திரை கீழே விழுகின்ற பொழுது அவளைத் தாங்கி, அவளுடைய மனதை அரித்து கொண்டிருக்கும் துக்கம் என்னும் வாளை ஆறுதல் கூறி ராமன் அகற்றினான். ‘‘சோர்வாளை ஓடித் தொழுது ஏந்தினன் துன்பம் என்னும் ஈர் வாளை வாங்கி மனம் தேறுதற்கு ஏற்ற செய்வான்” என்பது கம்ப கம்ப சித்திரம்.11. இராமனும் கைகேயியும் மூன்றாவது தாய் கைகேயி. அது என்னவோ தெரியவில்லை, எல்லோருமே கைகேயியை கொடுமைக்காரியாகவே சித்தரிக்கின்றனர்.கைகேயி இல்லா விட்டால் ராமாயணம் ஏது?.அவதார நோக்கம் எப்படி நிறைவேறும்? ராமனை வளர்த்தவள் கைகேயி. மந்தரை ராமனுக்கு மணிமகுடம் என்று சொன்னவுடன் கோசலையை விட, தசரதனை விட, மிகவும் சந்தோஷப்பட்டவள் கைகேயி. தன் மகன் வேறு; கோசலை மகன் வேறு என்ற வேற்றுமை கைகேயிக்கு இல்லை என்பதை “வேற்றுமை உற்றிலள்” என்று கம்பன் சுட்டிக் காட்டுவார். மந்தரை சொன்னதற்காக தன்னுடைய முத்து மாலையைப் பரிசாகத்  தந்தவள் அவள்.12. ராமன்தான் என் கண்மணிகைகேயி ராமன் மீது கொண்ட அன்பையும், அவனுக்கு மகுடம் என்றவுடன் அவள் அடைந்த மகிழ்ச்சியையும், வால்மீகியை விடவும், கம்பனை விடவும், ரசித்து ரசித்துச் சொன்னவர் அருணாச்சல கவிராயர். தன்னிடம் கோள் சொன்ன மந்தரையிடம், ‘‘பாமரத்தனமாக ஏன் பேசுகிறாய்? அவன் தான் பட்டத்துக்கு உரியவன்” என்று எடுத்துச் சொல்லி, காரணத்தை அடுக்குவாள்.பாமரமே,  உனக்கு என்னடி பேச்சு? பழம் நழுவி பாலில் விழுந்தால் போல் ஆச்சு பரசுராம கர்வம் தீர்த்தவன் ‘‘டி”அவன் நம்மையெல்லாம் காத்தவன் ‘‘டி” பட்டம் கட்ட ஏற்ற வன் “டி” நாலு பேரில் மூத்தவன் ‘‘டி” அவன்தான் என் கண்மணி என்று தன்னுடைய கண்ணின் மணியாக ராமனைச் சொல்வாள்.13. அன்று அலர்ந்த செந்தாமரைபெற்ற தாய் கோசலையை விட, வளர்த்த தாய் கைகேயியிடம் பெரு மதிப்பும் அன்பும் கொண்டிருந்தான். கடைசிவரை தன்னை காட்டுக்கு அனுப்பியவள் என்று கைகேயியை வெறுக்கவே இல்லை. மந்தரையின் போதனையால் மனம் மாறிய கைகேயி, ராமனை காட்டுக்கு அனுப்புவதற்காக அழைக்கிறாள் . தான் சொன்னால் கேட்பானோ மாட்டானோ என்கிற தயக்கம் அவளுக்கு இருந்தது. அதனால் இது அரச கட்டளை என்று சொல்ல, ராமன் புரிந்து கொண்டு, சிரித்துக்கொண்டே சொல்லுகின்றான். மன்னவன் பணியன்று ஆகின், நும் பணி மறுப்பனோ? என்பின்னவன் பெற்ற செல்வம் அடியனேன் பெற்றது அன்றோ?என் இனி உறுதி அப்பால்? இப்பணி தலைமேற் கொண்டேன்;மின்னொளிர் கானம் இன்றே போகின்றேன்; விடையும் கொண்டேன்.’ தாயின் கட்டளையை ஏற்ற போது அவன் முகம் அன்று அலர்ந்த  செந்தாமரை போல மலர்ந்தது என்று கம்பன் காட்டுவான்.14. இராமன் முதலில் வணங்கியது யாரை?வனவாசம் முடிந்து திரும்ப அயோத்திக்கு வந்தவுடன் அவனுடைய மூன்று அன்னையர்களும் நிற்கும் பொழுது ராமன் முதலில் வணங்கியது கோசலையை அல்ல, கைகேயியைத் தான். “கைகையன் தனையை முந்தக் காலூறப் பணிந்து” என்பது கம்பன் பாட்டு.தன்னுடைய தந்தை கைகேயியின் உறவை ‘‘நீ எனக்கு மனைவியும் அல்ல. பரதன் எனக்கு மகனும் அல்ல’’ என்று சூளுரைத்து துறந்ததை அறிந்தான் ராமன், போர் முடிவில் ஆசி வழங்க வந்த தசரதன் இராமனிடம் ‘‘உனக்கு என்ன வரம் வேண்டும்?” என்று கேட்கும் பொழுது, இராமன் “தந்தையே, நீ கொடியவள் என்று கைவிட்ட, எனக்கு தெய்வம் போன்ற கைகேயியையும் அவளுடைய மகனான பரதனை தாயும் தம்பியுமாக நீ ஏற்றுக்கொள்ள வேண்டும்” தீயள்  என்று நீ துறந்த என் தெய்வமும் மகனும் தாயும் தம்பியும் ஆம் வரம் தருக எனத்  தாழ்ந்தான்” என்பது கம்ப சித்திரம்.15. மாற்றுத் தாய், ஈற்றுத் தாய், கூற்றுத்தாய்பெரியாழ்வார் இராமனுடைய மூன்று தாய்மார்களையும் பெயரைச் சொல்லி அழைக்காமல் மாற்றுத்தாய், ஈற்றுத்தாய், கூற்றுத்தாய் என்ற மூன்று சொற்களால்  குறிப்பிடும் நயம் அற்புதமானது. மாற்றுத்தாய் சென்று வனம்போகே என்றிட ஈற்றுத்தாய் பின்தொடர்ந்து  எம்பிரான்!  என்று அழ கூற்றுத் தாய் சொல்லக்  கொடிய வனம் போனசீற்றம் இலாதானைப் பாடிப் பற சீதை மணாளனைப் பாடிப் பற.இதில் மாற்றுத்தாய் என்பது பெற்ற தாய்க்கு மாறான இராமனை வளர்த்த கைகேயியைக் குறிக்கும். ஈற்றுத்தாய் என்பது ஈன்ற தாயான கோசலையைக் குறிக்கும். அவள் தானே பெற்றவள். மகனே வனம் போகாதே என்று தடுக்கிறாள். அழுகிறாள். கூற்றுத் தாய் என்பது சுமித்திரையைக் குறிக்கும். அவள் இரண்டு கூறு பாயாசங்களை பெற்று இலக்குவனையும் சத்துருக் கணையும் ஈன்றவள். இதை இன்னொரு விதமாகவும் சொல்வார்கள். மாற்றுத்தாய் என்பது சுமித்திரையைக்  குறிப்பதாகவும், கூற்றுத் தாய் என்பது தசரதனுக்கு எமனாக அதாவது கூற்றுவனாக வந்த கைகேயியைக்  குறிப்பதாகவும் ஒரு பொருள் உண்டு.16. சக்கரவர்த்தி திருமகன் ஒரு தந்தையும் தனயனும் எப்படி இருக்க வேண்டும் என்கின்ற தர்ம முறை தசரதன் ராமன் இருவரிடத்திலும் வெளிப்படும். உலகுக்கெல்லாம் தந்தையான பகவான், தனக்கு ஒரு தந்தையைத்  தேர்ந்தெடுக்கும் பொழுது, இஷ்வாகு  குலத்திலே தசரதனைத் தேர்ந்தெடுத்தான் என்பதிலிருந்து தசரதனின் சிறப்பு தெரியவரும். பத்து திசைகளையும் வென்று, நிர்வகித்து, சக்கரவர்த்தி என்கின்ற பெருமையுடன் காத்தவன் தசரதன். இராமன் மகனாகப்  பிறந்த பிறகு இராமனை கண் போல் பாதுகாப்பதன் மூலம், இந்த உலகத்தைப் பாதுகாக்கலாம் என்று நினைத்தவன். வைணவ மரபில் இராமனை அழைக்கும் பொழுது இராமன் என்று அழைக்க மாட்டார்கள். சக்கரவர்த்தி திருமகன் என்றுதான் அழைப்பார்கள்.17. ஏன் கைகேயியிடம் அதிக அன்பு?தசரதன் தனக்குரிய மூன்று மகிஷிகளில் கைகேயியின் மீது அதிக அன்பைக் கொண்டிருந்தான். அவள் இளைய மனைவி. குமாரர்களில் இராமன் மீது அதிக அன்பைக் கொண்டிருந்தான். குமாரர்களில் இராமன் மூத்தவன். இதற்கு ஒரு காரணம் இருக்கிறது. பரதனைப்  பெற்றெடுத்த கைகேயி, கோசலை பெற்றெடுத்த இராமனிடம் தான் மிக அதிகமான அன்பைக் கொண்டிருந்தாள். இராமனை வளர்த்தவள் அவள்.  அதனால் இராமன் பெரும்பாலும் கைகேயின் இல்லத்திலேயே இருப்பான். கைகேயியின் இல்லத்தில் இராமன் இருப்பதால் தசரதனும் கைகேயின் இல்லத்தில் இருப்பான். தசரதன், கைகேயி பெற்று வளர்த்த மகன்(உனைப்பயந்த கைகேசி) ராமன் என்றே சொல்வதை கவனிக்கலாம். இராமன் மீது தன்னைப் போலவே அதிக பாசம் வைத்திருந்த கைகேயின் மீது இயல்பாகவே தசரதனின் அன்பு அதிகரித்திருந்தது. அதுவே தசரதனின் முடிவுக்கு காரணமானது. 18. ராமனுக்காக உயிர் துறந்தவன் வைணவ மரபில் ஞான பாவத்தை விட பிரேம பாவத்தை அதிகம் கொண்டாடுவார்கள். பிரேம பாவம் அதிகரிக்கும் பொழுது, வந்திருப்பவன் பரம்பொருள் (மஹாவிஷ்ணு) என்ற நினைவு கூட போய்விடும். மகன் என்ற வாஞ்சை தான் மிஞ்சி நிற்கும். அதுதான் தசரதனிடம் இருந்தது. தசரதன் ராமனிடம் ஆழங்கால் பட்டிருந்தான். அதனால் ராமனிடம் சேர்ந்திருக்கும் பொழுது அவனுக்கு மகிழ்ச்சி. ராமனைப் பிரிந்தால்  வருத்தம். இன்னும் ஒரு படி மேலே போய் இராமனுடைய பிரிவைத்  தாங்க முடியாமல் தன்னுடைய உயிரையே இழந் தான் தசரதன். ‘‘இராமன் காடாளப்  போனான்; தசரதன் வான் ஆளப் போனான்” என்று சொல்வார்கள். பெற்று வளர்த்த தாய்மார்களுக்கு இல்லாத அசாதாரணமான   பரிவு தசரதனுக்கு இருந்தது. 19. நன்மகன் ராமன் குலசேகர ஆழ்வார் இராமனை நன்மகன் என்று அழைக்கிறார்.‘‘நானிலத்தை யாள்வித்தேன் நன்மகனே”என்பது பாசுர வரி.  நன்மகன் என்ற சொல்லுக்கு உரை விளக்கம் தந்த ஆசாரியர்கள், ‘‘ஒரு மகனுக்குரிய எல்லா குணங்களையும் உடையவன். தந்தையின் சொல் கேட்டு நடப்பவன்.  அவனே நன்மகன்” (புத்ரலக்ஷணங்களைப் பூர்த்தியாகவுடையவன் என்றபடி தன் சொல் தவறாது நடக்குமவனான மகனென்க.)என்று விளக்கம் அளித்தார்கள்.20. இராமன் வேறு; என் உயிர் வேறு அல்ல இராமனை ஒரு கணம் பிரிந்திருந்தாலும் உயிர் தரிக்க மாட்டான் தசரதன். அதனால் தான் முதன் முதலில் விசுவாமித்திரன் தன்னோடு காட்டுக்கு இராமனை அனுப்ப வேண்டும் என்று கேட்ட பொழுது, துடித்தான். பார்வை இல்லாத ஒருவன் பார்வை வந்து, உடனடியாக, அந்தக்  கண் பார்வையை பறி கொடுத்தால் எத்தனை துன்பம் அடைவானோ அத்தனை துன்பத்தை அடைந்ததாக (கண்ணிலான் பெற்றிழந்தான்) கம்பன் காட்டுகின்றார். அதைப்போலவே திருமணம் முடிந்து மிதிலையில் இருந்து அயோத்திக்கு திரும்புகின்ற பொழுது பரசுராமன் சண்டைக்கு வந்து நிற்கின்றார். அவரிடத்திலே இராமனுக்காக சரணாகதி புகுகின்றார் தசரதன். ‘‘சிவனும், பிரம் மனும், திருமாலும் உன் வீரத்துக்கு ஒரு பொருளாக மாட்டார்கள். அப்படி இருக்க அற்ப மானிடர் உனக்கு ஒரு பொருள் அல்லவே. இந்த இராமனும் எனது பிராணனும் இனி உன் அடைக்கலப்  பொருட்கள்”

சிவனும் அயன்  அரியும் அலர்; சிறு மானுடர் பொருளோ
இவனும் எனது உயிரும் உனது அபயம்
இனி என்றான் 
‘‘எனது உயிர் வேறு ராமன் வேறு இல்லை.
இரண்டும் ஒன்றுதான் ”என்பதை சொல்லாமல் சொல்லுகின்றான் தசரதன்.

21. உடனே இராமனை அழைத்து வா வால்மீகி ராமாயணத்திலும், கம்பராமாயணத்திலும் இல்லாத ஒரு அற்புதமான காட்சியை குலசேகர ஆழ்வார் சித்தரிக்கிறார். ஸ்ரீராமனை பார்க் காமல் தசரதனால் ஒரு நொடி கூட இருக்க முடியாது. அரசவைக்குச் சென்றாலும் நினைவெல்லாம் ராமன் மீதுதான் இருக்கும். அரசவைக் காரியங்களைக்  கவனிக்கும் பொழுதே ராமன் மீது நினைவு வந்துவிடும். உடனே சுமந்திரனை அழைத்து இராமனை அழைத்து வரும்படி கட்டளையிடுவான். அப்பொழுது இராமன் ஓடி வருவான். ஓடி வரும் பொழுது அப்படியே வைத்த கண் வாங்காது அவனைப்  பார்த்துக் கொண்டிருப்பான். அவன் மடி மீது அமர்ந்து, ‘‘கூப்பிட்டீர்களா, என்ன காரணம்” என்று கேட்டவுடன், ‘‘ஒன்றும் இல்லை; நீ போகலாம்” என்பான். உடனே இராமன் இறங்கி ஓடுவான். 22. முன்னழகும் பின்னழகும்கண் மறையும் வரை இராமனைப்  பார்த்துக் கொண்டிருப்பான். ஒரு சில நிமிடங்கள் தான். மறுபடியும் இராமனைப்  பார்க்க முடியவில்லை என்கிற தவிப்பு வர, சுமந்திரனைக் கூப்பிட்டு மறுபடியும் இராமனை அழைத்து வரும் படி கட்டளை இடுவான். இப்படி இராமன் வருவதும் போவதும் என அந்த நாளே  போய்விடும். இராமன் ஓடிவரும் பொழுது அவனுடைய முன்னழகையும் அவன் திரும்பி ஓடும்பொழுது அவனுடைய பின்னழகையும் ரசிக்கக் கூடிய  ரசிகனாக தசரதன் இருந்தான். அப்படி ரசிப்பதில் தான் அவனுடைய உயிர் இருந்தது என்பதைக் காட்டும் உருக்கமான பாசுரம்.வாபோகு வாஇன்னம் வந்தொருகால் கண்டுபோ மலராள் கூந்தல்வேய்போலு மெழில்தோளி தன்பொருட்டா விடையோன்றன் வில்லைச் செற்றாய்மாபோகு நெடுங்கானம் வல்வினையேன் மனமுருக்கும் மகனே இன்றுநீபோக என்னெஞ்ச மிருபிளவாய்ப் போகாதே நிற்கு மாறேஇந்தப்  பாசுரத்தின் கடைசி வரியை ஒருமுறை படித்துப்  பாருங்கள். ‘‘என்னைப் பிரிந்து நீ காட்டுக்கு போகிறாய் என்று கேட்டவுடன், என்னுடைய நெஞ்சம் இரண்டு கூறாகப்  பிளந்துப் போயிருக்க வேண்டும். அப்படி போகவில்லை என்றால் என் நெஞ்சம் எத்தனை வலிமை?” என்பது போல அமைந்த பாசுரம்.23. மயங்கி விழுந்த இராமன்இராமன் தசரதன் மீது கொண்டிருந்த அன்பு, தசரதன் ராமன் மீது கொண்டிருந்த அன்புக்கு சற்றும் குறைந்தது அல்ல. எத்தனைத் துன்பம் வந்தாலும் தந்தையின் சத்தியம் காப்பாற்றப்பட வேண்டும், அதுதான் ஒரு தனயனுக்கு தலையாய கடமை என்பதில் உறுதியாக இருந்தவன் இராமன். தசரதன் இறந்த பொழுது, ‘‘வாய்மைக்கு இனி யார் உளர் ?”என்று கம்பன் கேட்கின்றான். காட்டில் வசிக்கும்போது பரதன் வருகின்றான். தன்னுடைய தந்தை தசரதன் இறந்து விட்டான் என்று செய்தி கேட்டதும், ‘‘வெந்த புண்ணில் நுழைந்த வேல் போல, வார்த்தை செவியில் நுழைவதற்கு முன்னாலே, கண்ணும் மனமும் காற்றா டியை போல் கழன்று விழ, மயங்கி தரையில் விழுந்தான் ராமன். இதை இப்படிச்  சொன்னால் சரிதான். ஆனால் கம்பன் ஒரு படி மேலே போய், விண் ணுலகத்துக்கு அப்பால் உள்ள பரமபதத்துக்கு  உரியவனான இராமன், தசரதனின் மரணத்தைக்  கேட்டு தரையில் விழுந்தான் என்று சொல்வதில் இருந்து, இராமன் தசரதன் மீது கொண்ட அளவற்ற அன்பு தெரிகிறது. விண்ணிடை அடைந்தனன் என்ற வெய்ய சொல் புண்ணிடை அயில் எனச் செவி புகாமுனம் கண்ணொடு  மனம் சுழல் கறங்கு போல் ஆய் மண்ணினை விழுந்தனன் வானின் உம்பரான்24. பெயர் சூட்டிய குருதசரதனுக்கும் இராமனுக்கும் குருவான வசிஷ்டர் பிரம்மனின் புதல்வர். புகழ்பெற்ற சப்தரிஷிகளுள் ஒருவர். பிள்ளை இல்லாத தன்னுடைய குறையை தசரதன் குரு வசிஷ்டரிடம் சொல்லிப் புலம்பிய பொழுது சாட்சாத் அந்தப்  பெருமானே, தசரதனுக்குப் பிள்ளையாகப்  பிறக்கப் போகின்றான் என்கின்ற தேவ ரகசியத்தை அறிந்து புத்ர காமேஷ்டி யாகத்தைச் செய்யச் சொல்லுகின்றார் வசிஷ்டர். புத்திர காமேஷ்டி யாகம் மூலம் திருமாலே தசரதனுக்குப் பிள்ளையாக அவதரிக்கிறார். அப்படி அவதரித்த பிள்ளைகளுக்குப் பெயர் சூட்டியவர் வசிஷ்டர்.கரா மலைய தளர் கைக்கரி எய்த்தே  அரா அணையில் துயில்வோய்  என அந்நாள்  விராவி அளித்தருள் மெய்ப்பொருளுக்கே இராமன் எனப்  பெயர் ஈந்தனன் அன்றேகுரு என்ற நிலையை மீறி, இராமனிடத்திலே ஆழமான அன்பை வைத்திருந்தார் வசிஷ்டர். அதைப்போல குலகுரு வசிஷ்டர் என்ன சொன்னாலும் தட்டாமல் நிறைவேற்றும் ஒரு சீடனாக இராமன் திகழ்ந்தான் என்பதை இராமாயணம் முழுக்கக்  காணலாம்.25. விஸ்வாமித்திரர் ‘‘நான் அறிவேன்”இராமாயணத்திலே எம்பெருமானாகிய ராமன் இரண்டு ஆச்சாரியார்களை பெற்றான். ஒருவர் வசிஷ்டர் என்று பார்த்தோம். அவர் குலகுரு. இன்னொருவர் விசுவாமித்திர மகரிஷி. விஸ்வம் என்றால் உலகம். மித்ரன் என்றால் நண்பன். இந்த உலகுக்கு நண்பன் என்கிற பொருள் கொண்ட பெயரை உடையவர் விசுவாமித்திரர். விசுவாமித்திரருக்கும் வசிஷ்டருக்கும் ஒரு காலத்தில் பகை இருந்தது. எப்படி கருடனும் பாம்பும் ஒன்றுக்கொன்று பகையாக இருந்தாலும், பகவானிடத்திலே இணைந்து இருக்கிறதோ, அப்படி வசிஷ்டரும் விசுவாமித்திரரும் இராமருடைய விஷயத்திலே ஒன்றாகவே இணைந்து செயல் படுவதை இராமாயணத்தில் காணலாம். பரம்பொருள் ராமனாக வந்து அவதரித் திருக்கிறான் என்பது வசிஷ்டருக்குத் தெரிந்தாலும் அவர் ரகசியத்தை  வெளியே சொல்லவில்லை. ஆனால் விசுவாமித்திரர் சபையில் போட்டு உடைத்து விடுகிறார்.” தசரதா! நீ சாதாரண பிள்ளை என்று நினைக்கக்கூடிய இராமன் பரம்பொருள் என்பதை நான் அறிவேன். வசிஷ்டர் போன்ற ரிஷிகளும் அறிவார்கள். அஹம்வேத்மி மஹாத்மானம் ராமம் ஸத்யபராக்ரமம் வசிஷ் டோபி மஹாதேஜா யே சேமே தபஸி ஸ்திதா:’ இந்த இடத்தில் வால்மீகியின் இந்த  ஸ்லோகத்தை எடுத்து பெரியவாச்சான் பிள்ளை பற்பல அர்த்தங்களை கொட்டித்  தீர்க்கிறார். 26. பிராட்டி பெருமாளை சேர்த்து வைத்தவர் பரம்பொருள் இராமனாக வந்து  அவதரித்து விட்டான். பிராட்டி சீதையாக அவதரித்து விட்டாள். இந்த இருவரையும் சேர்த்து வைக்கக்கூடிய கைங் கரியத்தைச் செய்தவர் விசுவாமித்திரர். அது மட்டும் இல்லை இராமனுக்கு முதன் முதலில் சுப்ரபாதம் பாடியவரும் அவர்தான். இராமன் விசுவா மித்திரரை   தனது குரு என்கிற நிலையை என்றும் மறந்ததில்லை. விசுவாமித்திரர் வேள்வியை இராமன் காத்து முடித்தவுடன். ‘‘இந்த உலகத்தை முழுக்க படைத்து காக்கும் பரம்பொருளான நீ இன்று என்னுடைய கேள்வியை காப்பாற்றிக்  கொடுத்தாய்” என்று ஒரு வார்த்தையைச் (அவன் பரம்பொருள்) சொல்லிப்  பாராட்டுகிறார்.”என்ன பணியை நான் செய்ய வேண்டும்?” என்று குருவைக்  கேட்பது சீடனின் கடமை. அதை இராமன் மிக அழகாகச்  செய்கிறான். ‘‘குருவே  சொன்ன கடமை நிறைவேறிவிட்டது அடுத்து நான் செய்ய வேண்டியது என்ன? என்று கேட்கும் பொழுது விசுவாமித்திரன் இராம அவதாரத்தின் நோக்கத்தை சூட்சுமமாக சொல்லிக் காட்டுகின்றார். அந்தப் பாடல் இது.அரிய யான் சொலின் ஐய நிற்கு அரியது ஒன்று இல்லை பெரிய காரியம் உள அவை முடிப்பது பின்னர் விரியும் வார் புனல் மருதம் சூழ்  மிதிலையர் கோமான் புரியும் வேள்வியும் காண்டும் நாம் எழுக என்று போனார்‘‘பெரிய காரியம் உள, அவை முடிப்பது பின்னர் ” இராவண வதம் போன்ற பெரிய காரியங்கள் பின்னால் உண்டு. இப்போதைக்கு மிதிலை போவோம் என்ற வரியில் உள்ள அர்த்தத்தைக் கவனிக்க வேண்டும்.27. இராமாயணமும் மகாபாரதமும் இராமாயணத்திற்கும் மகாபாரதத்திற்கும் என்ன வேறுபாடு என்பதை ஒரே வரியில் சொல்லிவிடலாம். அதை ஒரு திரைப்படப் பாடலிலே கவியரசு கண்ணதாசன் மிக மிக அற்புதமாகச் சொல்லுவார். பாகப்பிரிவினை என்ற படத்தில் எழுதப்பட்ட அந்தப் பாடலின் பல்லவி இது. ஒற்றுமையாய் வாழ்வதாலே உண்டு நன்மையே வேற்றுமையை  வளர்ப்பதனாலே விளையும் தீமையே ஒற்றுமையாய் வாழ்ந்தால் என்னென்ன நன்மைகள் உண்டு என்பதைச்  சொல்ல வந்த காப்பியம் இராமாயணம்.  வேற்றுமையை வளர்த்தால் எப்படி மக்கள் அழிவார்கள் என்பதை குருஷேத்திரப் போர் மூலம் காட்டிய காப்பியம் மகாபாரதம். 18 அக்குரோணியும் அழிந்து விஞ்சியர்கள் எத்தனை பேர்? மனித சமூகம் அறிய வேண்டிய செய்தி அல்லவா இந்தியாவின் இரண்டு இதிகாசங்கள் தரும் செய்தி.28. மூன்று தம்பியர் இராமனுடைய உடன் பிறந்த சகோதரர்கள் மூன்று பேர். லட்சுமணன், பரதன், சத்ருக்கணன். பரம்பொருள் இராமனாக அவதரித்தான். அவனுக்கு ஒழிவில் காலமெல்லாம் உடனாய் இருந்து பணி புரியும் இறைத்தொண்டனாக லட்சுமணன் இருந்தான். சீதையைப் பிரிந்து பல மாதங்கள் சகித்துக் கொண்டிருந்த இராமன், லட்சுமணனைப் பிரிந்த பிறகு, ஒரு நொடியும் தாமதிக் காது தன்னுடைய சோதிக்குத்  திரும்பினான். ‘‘இமைப்பில நயனன்” (ஒரு நொடியும் தூங்காதவன்) என்று லட்சுமணனை கொண்டாடு வார்கள். கைங்கர்ய ஸ்ரீமான் என்றும், இளையபெருமாள் என்றும் லட்சுமணனை வைணவ உலகம் போற்றும். இராமனிடத்திலே பரதன்  கொண்ட அன்புக்கு  ஈடாகச் வேறு ஒருவரைச்  சொல்லவே முடியாது. இராமனுடைய தாய் கோசலை பரதனைப்  பற்றி சொல்லும் பொழுது  ‘‘ராமா உன்னை விட மும்மடங்கு நல்லவன்” என்று சொல்வதில் இருந்து பரதனின் பெருமையைப்  புரிந்து கொள்ளலாம். ‘‘படியில் குணத்து பரதநம்பி” என்று பரதனின் பெருமையை ஆழ்வார்கள் பாடுவார்கள். 29. ஒரே பாட்டுக்காரன் கடைசி தம்பி சத்துருக்கனன். பரம பாகவதனான பரதன் கூடவே இருந்தவன். பாகவத நிஷ்டை என்று சத்ருக்கனாழ்வாரை வைணவ மரபு போற்றும். ராமன் சொன்ன பதினான்கு ஆண்டுகள் முடிந்து விட்டது. இராமன் வருவதில் தாமதம். ‘‘தம்பி சத்ருக்கனா, நீ இந்த ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொள். நான் உயிரை விடப் போகிறேன்” என்று பரதன் கூறினான். சத்ருக்கனன் துடித்துப் போனான்.  ‘‘இந்த அரசை விட்டு, காட்டை ஆள போனான் ஒருவன். (இராமன்)அவனுக்குத்  தொண்டு செய்ய அவன் பின்னால் போனான் ஒரு தம்பி (இளைய பெருமாள்). அண்ணன் வர தாமதம் ஆகி விட்டது என்று உயிரை விடத் துணிந்தான்  ஒரு தம்பி (பரதன்). இவர்களுக்கு இடையில், இந்த அரசை ஏற்று நடத்த நான் ஒரு தம்பி, நன்றாக இருக்கிறது கதை”

கான் ஆள நிலமகளைக் கைவிட்டுப் போனானைக் காத்து, பின்பு போனானும் ஒரு தம்பி; ‘‘போனவன் தான் வரும் அவதி போயிற்று’’ என்னா, ஆனாத உயிர் விட என்று அமைவானும் ஒரு தம்பி; அயலே நாணாது, யானாம் இவ் அரசு ஆள்வென்? என்னே, இவ் அரசாட்சி! இனிதே அம்மா!30. ஸ்ரீராம நவமியின் நோக்கம் இதுதான்இராமாயணம் முழுக்க அன்புதான். அடைக்கலம் தான். தொண்டு தான். தூய்மை தான். வேடனாகிய குகனை தம்பியாக ஏற்றுக் கொண்ட இராமன் வானரமாகிய சுக்ரீவனையும், அரக்கனாகிய வீடணனையும் சகோதரனாகவே ஏற்றுக்கொள்ளுகின்றான் என்றால் உலக சகோதரத்தை ஓங்கிச் சொல்லும் உன்னதமான இதிகாசம் இராமாயணம். ‘‘நடத்தையில் நின்று உயர் நாயகன்”என்று இராமனின் பெருமையை பலத்த குரலில் பேசும் காவியம் என்பதால்தான் பாரத நாட்டின் ஒரு குறிப்பிட்ட மாநிலத்தில் மட்டும் சிறப்பு பெறாது, காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பரந்த பாரத தேசத்தின் ஒவ்வொரு பகுதியிலும் இராமாயணம் போற்றப்படுகிறது. இராமன் வணங்கப் படுகிறான். நம்மாழ்வார் ஒரே வரியிலேயே சொல்லிவிட்டார். ‘‘கற்பார் இராமபிரானை அல்லால்  மற்றும் கற்பரோ?” என்று பாடினார். ஸ்ரீராம நவமி நன்னாள் எப்படிக் கொண்டாடுவது என்றால், 1. இராமனுடைய குணங்களை நெஞ்சில் ஏற்றி போற்ற வேண்டும். 2. பரம்பொருளாகிய ஸ்ரீராமனிடம் அடைக்கலம் புகுந்து நம் வாழ்வை ஏற்றிக் கொள்ள  வேண்டும். இந்த இரண்டும் தான் முக்கியம் என்பதை உணர்ந்து இந்த ஸ்ரீராம நவமியைக் கொண்டாடுவோம்.

தொகுப்பு: எஸ்.கோகுலாச்சாரி

You might be intrested in

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi