நன்றி குங்குமம் டாக்டர் நாடி நரம்பெல்லாம்…ஒலிம்பிக் போட்டியின் துவக்க நாள் அன்று ஏற்றப்படும் தீபம், கிரேக்க தொன்மம் முதல் இன்று வரை தொடரும் மிக முக்கியமான குறியீட்டு மற்றும் கவனத்திற்குரிய ஒன்று. இந்த தீப்பந்தம் தொடர் ஓட்டம் மூலமாகப் பல்வேறு நாடுகளுக்கு பயணப்பட்டு, வெவ்வேறு மனிதர்களின் கைகளுக்கு மாற்றப்பட்டு, அணையா நெருப்பாக ஒலிம்பிக் மைதானத்துக்கு வந்து சேர வேண்டும். அதைக் குறிப்பிடத்தக்கச் செயல் செய்த ஒருவர் ஏற்றி, போட்டியைத் தொடக்கி வைக்க வேண்டும் என்பது ஆயிரக்கணக்கான வருட மரபு. ஆகவே ஒவ்வொரு முறையும் இந்த வைபவம் அங்குள்ளோருக்கு மெய்சிலிர்க்கும் அனுபவமாக மாறிவிடுகிறது. இது உலகின் எங்கோ ஒரு மூலையில் நிகழ்கிறது என்பதல்ல, நாம் தெரிந்துகொள்ள வேண்டியது, இந்தத் தொடர் ஓட்டமும் அணையா விளக்கும் நம் உடலில் சதா சர்வ காலமும் நடந்து கொண்டேதான் இருக்கிறது. அது நம் அகமும் புறமும் வெளிச்சத்தை அளிக்கும் வல்லமை கொண்டது. பெரும்பாலும் நாம் அதை உணர்வதில்லை. உணர்ந்தவர் அந்த விளக்கைத் தூண்டி வெளிச்சத்தில் வாழ்கிறார். அந்த சுடருக்கு பெயர் ‘‘நாடிகள்’’.நவீன அறிவியலில் நியூரான்கள் அல்லது நியூரோ ட்ரான்ஸ் மிட்டர்கள் எனப்படும் கருதுகோள் இந்த தொடர் ‘ஒளி ஓட்டத்துக்கு ‘ மிக அணுக்கமான ஒன்று. அதாவது, நமது மூளை உடலின் அனைத்து பகுதிகளையும் தன்னுடன் இணைத்து , ஒரு வரைபடம் என வைத்திருக்கிறது, இந்த வரைபடத்தின் ஒரு பகுதியிலிருந்து சமிக்கை, வலது கால் பெருவிரலுக்குச் செல்ல வேண்டுமெனில், மேலே சொன்ன ‘ஒளியின் தொடர் ஓட்டம்’ நிகழவேண்டும். அந்த ஒளி கால் விரலை அசைக்கத் தேவையான தகவல்களுடன் ‘ஒளி அணையாமல்’ சென்று சேர வேண்டும். அதன் வேகம் ஒரு லட்சம் கோடி மணித்துளியில் ஒரு துளி நேரத்தில் நிகழ வேண்டும். இது அனைத்தும் ஒரு சேர நிகழ்ந்தால் உங்கள் நரம்பு மண்டலம் சீராக இயங்குகிறது என அர்த்தம். அதன் மூலம் உங்கள் கால் பெருவிரல் அசைக்கப்படும். இது நிகழாத ஒரு உடலை நாம் கோமா நோயாளி என்கிறோம். இந்த நிகழ்வை ஆயுர்வேதம் ‘ஷ்ரோதஸ்’ என்கிறது அதாவது செயல் வெளிப்பாட்டு நாளங்கள் எனலாம். இதை யோகமரபு ‘நாடிகள் ‘ என்கிறது, நாடிகள் என்பது ‘நரம்புகள்’ அல்ல நரம்பு மண்டலமும், அதன் இயக்க ஆற்றலும், அவை மற்ற உடலியல் இயக்கங்களுடன் மேற்கொள்ளும் தொடர்பும் என ஒரு நீண்ட செயல்பாடு. இந்த செயல் வெளிப்பாட்டு நாளங்களில் இயக்கங்கள் அதிகமானாலும், குறைவானாலும் அவை ஏதேனும் ஒரு நோய்க்கூறாக, நரம்புத் தளர்ச்சியாக, பக்கவாதமாக, மனச்சோர்வாக அல்லது பதற்றமாக மாறுகிறது. அவற்றைச் சரியாக நிர்வகிக்க ஆரோக்யமான வாழ்வியல் முறையும், சரியான உடல் உழைப்பு, உடற்பயிற்சி, தூக்கம், ஆரோக்யமான உணவு, எனப் பல விஷயங்களை அறிவியலும், மரபுசார் மருத்துவமும் பரிந்துரைக்கிறது. யோக மரபு, நம் உடலில் 72000 நாடிகள் இருப்பதாகவும், அவற்றில் மூன்று முக்கிய நாடிகள்தான் நம் அன்றாட செயல்பாடுகள் அனைத்துக்கும் அடிப்படை என்கிறது. இந்தக் கூற்று சித்தர்கள் மரபில் திருமூலர் முதல் இன்றுவரை தொடர்ந்து பேசப்படுகிறது. அவை இடகலை, பிங்கலை, சுசும்னா எனப்படும் சுழுமுனை.நாம் ஒவ்வொருவரும் ஆண்தன்மை, பெண்தன்மை என்கிற இருவகை இயக்க ஆற்றலுடன்தான் படைக்கப்படுகிறோம். ஓர் ஆணின் உடலில் பெண்ணும், பெண் உடலில் ஆணும் சேர்ந்தே இயங்குகிறது. இதில் ஓர் ஆண் உடலில் இடகலை எனும் நாடிகள் வழியாக அவருடைய இயக்கம் பெரும்பாலும் நிகழுமென்றால், அந்த உடல் பெண் தன்மையை, பெண்ணின் ஆற்றலை, இயல்பை வெளிப்படுத்தியபடியே இருக்கும்.இதுவே ஒரு பெண் உடலில் பிங்கலை எனும் நாடிகள் தொடர்ந்து தூண்டப்பட்ட நிலையில் இருந்தால் அந்த பெண்ணின் உடலில் ஆணின் தன்மைகள் மிகும். நாம் காணும் ஒரு பெண்ணில் தீடீரென ஒரு முரட்டுத்தன்மையும், செயல்களில் ஒருவித உடலியல் வேகமும், சற்று ஆக்ரோஷமாக கையாளும் தன்மையும் கூடிவருகிறது என்றால், அன்று அந்தப் பெண்ணில் பிங்கலை நாடிகள் தூண்டப்பட்டிருக்கின்றன என்றே பொருள். இதுவே நம்மில் மாறி மாறி நிகழ்கிறது. நாம் சமநிலையுடன் இருக்கும் நேரங்களில் ஆனந்தமான மனநிலையில், ஆரோக்யமான உடலியக்கத்தில், அபரிமிதமான ஆற்றலுடன் செயல்படுகையில், மிகுந்த புத்திகூர்மையான பொழுதுகளில் என நேர்மறையான நேரங்கள் அனைத்திலும் நம்முள் நிகழ்வது, இந்த 72000 நாடிகளின் மைய மண்டலமான சுழுமுனை எனும் சுசும்னா தூண்டப்பட்டிருக்கிறது (தூண்டப்படுவது என்பது நமது உயிராற்றல் எனப்படும் பிராண சக்தி அதனூடாக பாய்தல்) என்றே பொருள். ஒரு சிறப்பான யோகப்பயிற்சி திட்டத்தின் மூலம் மிகச்சரியான பத்து ஆசனங்கள் முக்கியமான மூன்று பிராணாயாமப் பயிற்சிகள், இரண்டு பிரத்யாஹார பயிற்சிகள் என ஒரு ஆசிரியரின் துணையுடன் தேர்ந்தெடுக்க முடிந்தால், ஒரு வருடம் முதல் மூன்று வருடத்துக்குள், ஒருவர் அனைத்துத் தளங்களிலும் ஆரோக்யமான முழுமையான மனிதராக முடியும் என்கிறார் ஹத யோக பிரதீபிகையின் ஆசிரியர் முனிவர் சுவாமி ஸ்வாத்மாராமா. இதற்குக் கருதுகோளுக்கு இணையாகவே இன்றைய நவீன அறிவியலும், நரம்பியல் துறையும் நம்முடைய உடலில் உள்ள ‘வேகாஸ்’ நரம்புதான் இருப்பதிலேயே உன்னதமான நரம்புத்தொகை, என்றும் இது நமது முதுகுத்தண்டின் மையப்பகுதியில் தலை முதல் பிறப்புறுப்பு வரை நீண்டு செல்கிறது, இதைச் சரியாக நிர்வகித்தால் ஒருவர் உடல் மனம் இரண்டிலும் அபரிமிதமான ஆற்றலை, ஆரோக்கியத்தை அடைவார் எனப்படுகிறது. திரிகோணாசனம்இந்தப் பகுதியில் நாம் திரிகோணாசனத்தின் இரண்டாம் நிலையைப் பார்க்கலாம். ஒரு ஆசனப்பயிற்சி மூச்சுடனும், பல வகைகளில் நீட்டி மடக்கும் தன்மையுடனும், சரியாகத் திருப்புதல் மற்றும் அசைத்தலின் மூலமாகவும் நடைபெறும் பொழுது, நம் உடலில் தசை மற்றும் நரம்பு மண்டலங்கள்தான் முதலில் பயனடைகின்றன. அதிலும், இந்தப் பயிற்சி நமது சுரப்பிகளில் நேரடியாக அதன் நேர்மறைத் தாக்கத்தை ஏற்படுத்தி, சிறுநீரகக் கோளாறு, சோர்வு, பிறப்புறுப்பு மற்றும் காமம், கோபம், சமநிலையின்மை என்கிற உடல் மற்றும் உளவியல் சார் பிரச்சனைகளுக்கு நேரடித் தீர்வாகிறது. மூன்று மாதங்கள் ஒருவர் இதை தினசரி செய்து வரவேண்டும்.கால்கள் இரண்டும் விலகிய நிலையில் வைத்துக்கொண்டு, மைய நிலையில் மூச்சினை உள்ளிழுத்து மூச்சை வெளியிடும் பொழுது பக்கவாட்டில் சாய வேண்டும் மீண்டும் மைய நிலைக்கு வரும் பொழுது மூச்சும் உள்ளே வந்துவிட வேண்டும்,இடதும் வலதும் சாய்த்து நிமிர்ந்தால் ஒரு சுற்று. இப்படியாக ஐந்து முதல் ஏழு சுற்றுகள் வரை செய்யலாம்.காணொளியாக காண: https://www.youtube.com/watch?v=sk_BLg_crGo…