கரூர், நவ. 13: செம்மறி ஆடுகளுக்கு இலவசமாக தடுப்பூசி டிசம்பர் 10ம் தேதிவரரை போடப்படுகிறது.
கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: கரூர் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறை மூலம் டிசம்பர் 10ம்தேதி வரை அனைத்து வெள்ளாடுகள் மற்றும் செம்மறி ஆடுகளுக்கு இலவசமாக கால்நடை சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் 2வது சுற்று ஆட்டுக் கொல்லி நோய் தடுப்பூசி போடும் பணி நடைபெறவுள்ளது. இதற்காக, 3,24,000 டோஸ்கள் தடுப்பூசி மருந்துகள் பெறப்பட்டு மாவட்டம் முழுவதும் உள்ள செம்மறி ஆடுகள் 180900, வெள்ளாடுகள் 143100 என மொத்தம் 32400 ஆடுகளுக்கு தடுப்பூசி போடப்படவுள்ளன.
ஆட்டுக் கொல்லி நோய் வெள்ளாடுகள் மற்றும் செம்மறி ஆடுகளை தாக்கும் ஒரு வைரஸ் நோயாகும். பாதித்த ஆடுகளில் அதிக காய்ச்சல், சளி, கண்களில் நீர் வடிதல், கழிச்சல் போன்ற அறிகுறிகள் காணப்படும். இந்த நோய் ஆடுகளில் 90 சதவீதம் இறப்பை ஏற்படுத்தவதால் ஆடு வளர்ப்போர்களுக்கு அதிக பொருளாதார இழப்பு ஏற்படுகிறது. இந்த கொடிய நோயை ஒழிக்கும் வகையில் கால்நடை சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத் திட்டத்தின்கீழ் அனைத்து ஆடுகளுக்கும் ஆண்டுக்கு ஒரு முறை மூன்று ஆண்டுகளுக்கு தொடர்ந்து இலவசமாக தடுப்பூசி போடப்படும்.
சென்ற ஆண்டு முதல் சுற்றில் அனைத்து ஆடுகளுக்கும் தடுப்பூசி போடப்பட்டது. இதே போன்று, இந்தாண்டும் அனைத்து தகுதியான மூன்று மாதங்களுக்கு வெள்ளாடுகள் மற்றும் செம்மறியாடுகளுக்கு டிசம்பர் 10ம்தேதி வரை 30 நாட்களுக்கு கிராம அளவில் முகாம் அமைத்து மருத்துவக் குழுக்கள் மூலம் அனைத்து கிராமங்களுக்கும் தடுப்பூசி போடப்படவுள்ளது. மேலும், இது குறித்து முன்கூட்டியே தக்க விளம்பரம் செய்து கிராமங்களில் தடுப்பூசி போடப்படும். எனவே, ஆடு வளர்ப்போர் அனைவரும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தடுப்பூசியை இலவசமாக போட்டுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.