கோவை, மே 30: கோவை விமான நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த பையால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை விமான நிலையத்தில் இருந்து சென்னை, மும்பை, பெங்களூரு, டெல்லி, ஐதராபாத், பூனே, கோவா ஆகிய உள்நாட்டு பகுதிகளுக்கும், சிங்கப்பூர், ஷர்ஜா, அபுதாபி ஆகிய வெளிநாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் கோவை விமான நிலையத்திற்கு வந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை வரவேற்க, அக்கட்சி தொண்டர்கள் பலர் கூடியிருந்தனர். அப்போது விமான நிலையத்தின் புறப்பாடு முகப்பில் கருப்பு நிற பை ஒன்று கேட்பாரற்று கிடந்தது.
அதனை கவனித்த ஒன்றிய தொழில் பாதுகாப்பு படையினர் உடனடியாக மோப்பநாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் உதவியுடன் அந்த பையினை சோதனை செய்தனர். அதில் பிரச்சனக்குரிய பொருட்கள் எதுவும் இல்லை என்பதும், பயணி ஒருவர் தவறுதலாக விட்டுச் சென்றிருக்கலாம் என்பதும் தெரியவந்தது. பின்னர் அந்த பையினை பாதுகாப்பு படையினர் எடுத்து சென்றனர். விமான நிலைய வளாகத்தில் தனியாக கேட்பாரற்று கிடந்த பையினால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.