கோவை, ஜூன் 10: கோவை மாநகராட்சியில் பணியாற்றும் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் தங்களுக்கு நிர்ணயம் செய்யப்பட்ட சம்பளத்தை முழுமையாக வழங்க கோரி கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று முன் தினம் போராட்டத்தில் ஈடுபட்டனர். தரையில் அமர்ந்து நாள் முழுவதும் போராடினர். கடந்த சில ஆண்டாக முறையாக சம்பளம் வழங்கவில்லை. ஒப்பந்தம் எடுத்த நிறுவனம் முறையாக கூலி வழங்காமல் சம்பளத்தை பிடித்தம் செய்து வருகிறது. பலமுறை போராட்டம் நடத்தியும் இதற்கு தீர்வு காணப்படவில்லை. தங்களுக்கு நிர்ணயம் செய்த சம்பளம் முறையாக வழங்க வேண்டும் என மாநகராட்சி தூய்மை பணியாளர்கள், டிவைர்கள், கிளீனர்கள் வலியுறுத்தினர். இந்த நிலையில் நேற்று 2ம் நாளாக கலெக்டர் அலுவலகம் முன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், திடீர் மறியலில் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து மறியல் செய்த பல்வேறு தொழிற்சங்கங்களை சார்ந்த தமிழ்நாடு செல்வம், பன்னீர் செல்வம், ஜோதி உட்பட 252 பேரை கைது செய்தனர். இதில், 137 பேர் பெண் தொழிலாளர்கள். கோவை மாநகரில் 1800 தூய்மை பணியாளர்கள் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் மாநகரில் சுகாதார பணிகள் பாதிக்கப்பட்டன. இது குறித்து தூய்மை பணியாளர்கள் கூறியதாவது: அரசாணை 62ன் படி எங்களுக்கு முழுமையான சம்பளத்தை தர வேண்டும். தினக்கூலியாக 770 ரூபாய் வழங்க உத்தரவிடப்பட்டது. நகராட்சிகள் நிர்வாக ஆணையர் அலுவலகம் முழு சம்பளம் வழங்க அனுமதி வழங்கியது. ஆனால், கோவை மாநகராட்சி நிர்வாகம் நிர்வாக ஆணையர் உத்தரவை அமலாக்கவில்லை. கடந்த ஆண்டு முழு கூலி தருவதாக கூறிய கோவை மாநகராட்சி கமிஷனர், தற்போது நடந்த பேச்சு வார்த்தையில் அப்படி சொல்லவில்லை என மறுத்து கூறி விட்டார்.
மேலும், எங்களுக்கு தினக்கூலியாக 480 ரூபாய் தான் கிடைக்கிறது. இஎஸ்ஐ, பிஎப் 3800 ரூபாய் பிடித்தம் செய்கிறார்கள். எங்களின் பணத்தை இடையில் இருப்பவர்கள் யார்? எடுக்கிறார்கள் என எங்களுக்கு தெரியவில்லை. மாநகராட்சி நிர்வாகம், ஒப்பந்த நிறுவனத்திற்கு ஆதரவாக இருப்பதால் தான் எங்களுக்கு உரிய கூலி வழங்கப்படவில்லை. நிர்ணயம் செய்ததோ குறைந்தபட்ச கூலி தான். அதை கூட முழுமையாக தர மாநகராட்சி நிர்வாகம் முன் வரவில்லை. பல ஆண்டாக போராடியும் எங்களின் பிரச்னையை தீர்க்காமல் பேச்சு வார்த்தை நடத்தி அனுப்பி வைக்க பார்க்கிறார்கள். எங்களின் பிரச்னைக்கு தீர்வு காணாவிட்டால் போராட்டம் தொடரும். இவ்வாறு அவர்கள் கூறினர்.