கோவை, நவ. 17: தமிழகத்தில், பாரத பிரதமரின் “கிருஷி சன்சாயி யோஜனா திட்டத்தின்’’ கீழ் 100 குளங்களை பழுதுபார்த்து, சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வரும் திட்டத்தை அமல்படுத்த, ஒன்றிய அரசு அனுமதி வழங்கியுள்ளது. பாழடைந்த, பயன்பாடில்லாத மற்றும் சீரமைப்பு பணிகள் நடத்தவேண்டிய குளங்கள் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, சென்னையில் 11 குளங்கள், மதுரை மண்டலத்தில் 89 குளங்கள் தேர்வாகியுள்ளது.
இந்த திட்டத்திற்கு ரூ.100.50 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், கோவை, திருச்சி, சேலம் மண்டலத்தில் குளங்கள் தேர்வு செய்யப்படவில்லை. கோவை மண்டலத்தில், 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குளங்கள் இருக்கிறது. இதில், 30 ஆண்டிற்கு மேல் சீரமைப்பு பணிகள் நடக்காத 250-க்கும் மேற்பட்ட குளங்களை சீரமைக்க நிதி ஒதுக்கப்படவில்லை.
ஒன்றிய அரசின் இந்த திட்டத்தின்கீழ் குளங்களில் நீர் நிரப்ப, அதிகளவு நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த தேவையான நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. எனவே, இத்திட்டத்தில், கோவை மண்டலத்தை புறக்கணிக்க கூடாது. குறைந்தபட்ச அளவு நிதியை ஒதுக்கித்தர வேண்டும் என கோவை மண்டல விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.