கோவை, நவ. 12: கோவை பெரிய கடை வீதியில் தமிழ்நாடு கைத்தறி தொழில்கள் வளர்ச்சிக்கழகத்தில் மர கைவினைப்பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனை நேற்று துவங்கியது. இந்த கண்காட்சி வரும் 23ம் தேதி வரை நடக்கிறது. கண்காட்சியில், நூக்கமர ஈட்டி மரத்தாலான விநாயகர் சிலைகள், மணப் பலகைகள், சாமி சிலை வைக்கும் மண்டபங்கள், சாமி சிலைகள், யானைகள், ஊஞ்சல், சோபா செட் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளது. கண்காட்சி காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை நடக்கிறது. இந்நிலையில், போர்ச்சுக்கல் நாட்டில் வேதாந்த படிக்கும் 20-க்கும் மேற்பட்டவர்கள் கோவைக்கு வந்துள்ளனர்.
இவர்கள், கோவையில் உள்ள கோயில்கள், ஆன்மீகம் தொடர்பான இடங்களுக்கு சென்றனர். மேலும், தமிழ்நாட்டின் நாகரீகம் போன்றவை குறித்து ஆய்வு செய்கின்றனர். இந்நிலையில், போர்ச்சுக்கல் குழுவினர் பெரிய கடை வீதியில் உள்ள பூம்புகாருக்கு வந்தனர். பின்னர், அவர்கள் அங்கிருந்த கலை நயமிக்க பூஜைக்கு பயன்படுத்தப்படும் விளக்குகள், தட்டுகள், குங்குமம், விபூதி, சந்தன மரத்தில் செய்யப்பட்டிருந்த சாமி சிலைகள் ஆகியவற்றை வாங்கினர். தொடர்ந்து மர கைவினை பொருட்கள் கண்காட்சியை பார்வையிட்டனர்.