கோவை, செப்.20: கோவை நேரு ஸ்டேடியம் அருகேயுள்ள ஆடிஸ் வீதியில் பிளாட்பாரத்தில் ரத்த வெள்ளத்தில் ஒருவர் இறந்து கிடந்தார். நேற்று முன்தினம் காலை அங்கே கடை திறக்க சென்ற ஒர்க் ஷாப் உரிமையாளர் இது தொடர்பாக ரேஸ் கோர்ஸ் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இறந்து கிடந்தவரின் அருகே கட்டை கிடந்தது. ரத்தம் வழிந்த நிலையில் கட்டையை ரோட்டோரம் வீசி சென்றிருந்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்த போது இறந்தவர் பொள்ளாச்சியை சேர்ந்த ராஜேஷ் (40) என தெரியவந்தது.
இவருக்கு திருமணமாகி மனைவி, குழந்தை உள்ளனர். 10 ஆண்டிற்கு முன் இவர் மனைவியை பிரிந்து தனியாக வந்துவிட்டார். பிளாட்பாரத்தில் தங்கி சமையல் கூலி வேலை செய்து வந்தார். இவர் ஆடீஸ் வீதி பிளாட்பாரத்தில் மது குடித்து கொண்டிருந்தபோது இவருடன் கேரள மாநிலத்தை சேர்ந்த இன்னொரு கூலி தொழிலாளியான பென்னி (37) என்பவரும் மது குடித்துள்ளதாக தெரிகிறது.
மது போதையில் இருவரும் அடிக்கடி வாக்குவாதம் செய்து வந்தனர். இரவு 10 மணிக்கு பின்னர் அந்த பகுதியில் இருந்த வியாபாரிகள் கடையை மூடி வீட்டிற்கு சென்றுவிட்டனர். அதற்கு பின்னர்தான் ராஜேஷ் கட்டையால் தாக்கி கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இவருடன் மது குடித்த பென்னியை காணவில்லை. பென்னியின் குடும்பத்தினரை ராஜேஷ் தரக்குறைவாக பேசியதால் அவரை தாக்கி கொலை செய்திருப்பதாக தெரிகிறது. தப்பிய பென்னியை பிடிக்க தனிப்படை போலீசார் கேரளா சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.