கோவை, ஆக.30: புகழ்பெற்ற ஹாக்கி வீரர் மேஜர் தியான் சந்தின் பிறந்தநாளான ஆகஸ்ட் 29ம் தேதி தேசிய விளையாட்டு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் கோவையில் உள்ள தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகத்தின் சார் மண்டல அலுவலகம் சார்பாக தேசிய விளையாட்டு தினம் கொண்டாடப்பட்டது. இஎஸ்ஐசி அலுவலகம், சார் மண்டல அலுவலகம் மற்றும் கோவை பீளமேட்டில் உள்ள தனியார் மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் மைதானத்தில் இந்த விளையாட்டு நிகழ்ச்சியில் நடைபெற்றது.
கோவை தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகத்தின் சார் மண்டல அலுவலக ஊழியர்கள் வி.ஓ. சிதம்பரம் அணி, விஸ்வநாதன் ஆனந்த் அணி, வீரமங்கை வேலுநாச்சியார் அணி மற்றும் பவானி தேவி அணி என்ற நான்கு அணிகளாக பங்கேற்றனர். இதில் ஆண்கள் கிரிக்கெட், ஆண்கள் பேட்மிண்டன் (இறகுப்பந்து), பெண்கள் கயிறு இழுக்கும் போட்டி, பெண்கள் சமநிலைச் சவால் பந்தயம் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றது.