தொண்டாமுத்தூர், ஜூலை 8: கோவை பேரூர் அருகே மாதம்பட்டி இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளை மற்றும் ஆவின் சார்பில் குப்பனூர் கிராமத்தில் கறவை மாடுகள் வாங்குவதற்கு கடன் வழங்கும் முகாம் வங்கி மேலாளர் கார்த்திக் தலைமையில் நடைபெற்றது. முகாமில் கடன் கேட்டு ஏராளமான விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் விண்ணப்பம் செய்தனர்.
முன்னோடி விவசாயி குப்பனூர் இன்ஜினியர் பிரகாஷ் பேசுகையில், அதிகாரிகள் கிராமங்களை தேடி விவசாயிகளின் வீட்டுக்கு வந்து ஆவணங்களை கொண்டு குறைந்த வட்டியில், கறவை மாடு கடன் வழங்கப்படுகிறது. குறிப்பிட்ட நேரத்தில் கடனை திருப்பி செலுத்தி பயன்பெறுமாறு விவசாயிகளுக்கு வேண்டுகோள் விடுத்தார். நிகழ்ச்சியில் கோவை ஆவின் விரிவாக்க அலுவலர் தனலட்சுமி, குப்பனூர் பால் உற்பத்தியாளர் சங்கத்தின் செயலாட்சியர் குமரேசன், செயலாளர் ரங்கசாமி, அலுவலர் ராதாமணி, சுபா ராணி, அலுவலர்கள் முருகேசன், பிரபு உட்பட பலர் கலந்து கொண்டனர்.