Saturday, March 15, 2025
Home » கோவை அரசு மருத்துவமனை

கோவை அரசு மருத்துவமனை

by kannappan

நன்றி குங்குமம் டாக்டர் தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று வர்ணிக்கப்படும் பெருமை கொண்ட தொழில் நகரம் கோயம்புத்தூர். தமிழகத்தில் வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றான இங்கு, பல சிறப்பம்சங்களைக் கொண்ட பிரம்மாண்ட அரசு மருத்துவமனையும் குறிப்பிடத்தக்கதாக இருக்கிறது. ஆங்கிலேயர்களின் ஆட்சிக் காலத்திலேயே முக்கியத்துவம் பெற்ற மருத்துவமனையாகக் குறிப்பிடப்படும் இங்கு என்னென்ன சிகிச்சைகள் பொதுமக்களுக்கு வழங்கப்படுகின்றன, சிகிச்சைகளின் தரம் எப்படி இருக்கிறதென்று அறிய ரவுண்ட்ஸ் வந்தோம்…மருத்துவமனை வளாகத்தில் இருக்கும் பழமையான பிரிட்டிஷ் கால கட்டிடம் கம்பீரமாக நம்மை வரவேற்றது. நிலைய மருத்துவ அலுவலர் சௌந்தரவேல் மருத்துவமனை பற்றிய அடிப்படைத் தகவல்களைப் பகிர்ந்துகொண்டார். ‘‘பிரிட்டிஷ் இந்தியாவில் 1901-ம் ஆண்டு மாவட்ட மருத்துவமனையாக கோவை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை தொடங்கப்பட்டது. அதன்பின் 1966-ம் ஆண்டு, மருத்துவக்கல்லூரி மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது. இப்போது மேற்கு மண்டலத்தில் முக்கிய மருத்துவமனையாகவும் உள்ளது. இப்போது மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் வேகமாக அதிகரித்து வருகிறது. 2016-ம் ஆண்டு புதிதாக 23,477 சதுர அடியில் தரைத்தளத்துடன் கூடிய 4 மாடி கட்டடம் திறக்கப்பட்டது. தீவிர விபத்து சிகிச்சை பிரிவு, குழந்தைகள் நல சிகிச்சைத்துறை, இதயவியல் சிகிச்சை துறை என 33 துறைகள் செயல்பட்டு வருகின்றன. டாக்டர்கள், நர்சுகள், மருத்துவ பணியாளர்கள் மொத்தம் 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பணியாற்றி வருகிறோம், நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப இங்கு பணியாற்றுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.’’மருத்துவக்கல்லூரி டீன் அசோகன் மருத்துவக்கல்லூரி தொடர்பான வேறு சில முக்கியத் தகவல்களைக் கூறுகிறார். ‘‘ஆரம்பத்தில் குறைந்த அளவிலான நோயாளிகள்தான், இந்த மருத்துவமனைக்கு வருவார்கள். அதுவும் கோவையில் இருந்து மட்டும்தான் நோயாளிகள் வந்துகொண்டிருந்தனர். இப்போது சுற்றுவட்டாரத்தில் உள்ள நகரங்களில் இருந்தெல்லாம் இங்கு சிகிச்சைக்காக பலர் வருகின்றனர். கடந்த 4 ஆண்டுகளில் எங்கள் மருத்துவமனை ஒரு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக மாறியிருக்கிறது. அதிநவீன சிகிச்சைகள், நவீன கருவிகள் மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது. தனியார் மருத்துவமனைகளுக்கு சவால் விடும் வகையில் Cath lab, நவீன CT scan, MRI scan வசதி உள்ளது. இதயவியல் துறையில் கடந்த ஓராண்டில் 2 ஆயிரம் ஆஞ்சியோகிராம், ஆஞ்சியோபிளாஸ்ட் செய்துள்ளோம். லேப்ரோஸ்கோபி, எண்டோஸ்கோபி சிகிச்சையும் மேற்கொள்கிறோம். சிறுநீரக கல் அகற்றுதல், சிறுநீரக கல் அகற்றுவதற்கு பல்வேறு தொழில்நுட்பங்கள் பின்பற்றப்படுகிறது. காதுகேட்காத குழந்தைகளுக்கு காக்ளியர் இம்பிளாண்ட் பொருத்தி வருகிறோம். பிளாஸ்டிக் சர்ஜரி துறை மூலம் விபத்தில் பாதிக்கப்பட்ட, தீக்காயம் ஏற்பட்ட பகுதிகளை சீரமைக்கிறோம். அதேபோல், இப்போது சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை செய்துவருகிறோம். விரைவில் கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சை, இதய மாற்று அறுவைசிகிச்சை மேற்கொள்ள உள்ளோம். தினமும் புறநோயாளிகளாக 7,500 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். உள்நோயாளிகளின் படுக்ைக வசதி அதிகரிக்கப்பட்டுள்ளது. ஜப்பான் அரசின் நிதியுதவியுடன், மருத்துவமனையில் பல்வேறு மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படுவதோடு, அதிநவீன மருத்துவ உபகரணங்கள் வாங்கப்பட உள்ளது. இவற்றின்மூலம் பயன் பெறுவோர் எண்ணிக்கை அதிகரிக்கும்.’’குழந்தைகள் நல மருத்துவத்துறை தலைவர் பூமா‘‘எங்கள் மருத்துவமனையில் ஒவ்வொரு மாதமும், 700 பிரசவங்கள் வரை மேற்கொள்கிறோம். அதில் 350-400 குழந்தைகள் ஆபத்தான நிலையில் பிறக்கிறது. 1.5 கிலோ எடையுடன் பிறக்கும் குழந்தைகளுக்கு, கங்காரு மதர் கேர் சிகிச்சை அளிக்கப்படுகிறது. குழந்தைகளுக்கான தீவிர சிசு பராமரிப்பில் பல்வேறு நவீன தொழில்நுட்பங்களை புகுத்தியுள்ளோம். கடந்த ஒரு வருடத்தில், 1.5 கிலோ எடையுடன் பிறந்த 150 குழந்தைகளை காப்பாற்றியுள்ளோம். அதேபோல் 650 கிராம் எடையுடன் பிறந்த குழந்தையையும் காப்பாற்றியுள்ளோம். கடந்த 5 ஆண்டுகளில் குறைந்த எடையுடன் பிறந்த 12 ஆயிரத்திற்கும் அதிகமான குழந்தைகளை காப்பாற்றியுள்ளோம். ஹார்மோன் குறைபாடு காரணமாக உடல் வளர்ச்சி இல்லாத குழந்தைகளின் வளர்ச்சிக்கு பிரத்யேக சிகிச்சை அளிக்கிறோம். தற்போது இந்த பிரிவில் 5 குழந்தைகளை பராமரித்து வருகிறோம். நரம்பு தளர்ச்சி, தாலசீமியா, நிமோனியாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு பிரத்யேக சிகிச்சை அளிக்கிறோம். எங்கள் மருத்துவமனையில் மகப்பேறு சிகிச்சை சிசு இறப்பை குறைத்துள்ளோம். பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பில் சிறந்த மருத்துவமனைகள் என மத்திய அரசு வெளியிட்ட பட்டியலில் தமிழக அளவில் முதலிடம் பிடித்துள்ளோம்.’’ முடநீக்கியல் துறை இயக்குனர் வெற்றிவேல் செழியன்‘‘இந்திய அளவில் அரசு மருத்துவமனைகளில் இல்லாத அளவுக்கு எங்கள் துறையில் ஆதரவற்ற நோயாளிகளுக்காக என தனி வார்டு அமைத்துள்ளோம். இதில், 20 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருநங்கை ஒருவரை அந்த வார்டின் மேற்பார்வையாளராக பணியில் வைத்துள்ளோம். வார்டுகளில் நோயாளிகளின் பாதுகாப்புக்காக கண்காணிப்பு கேமரா பொருத்தியுள்ளோம். விபத்தில் சிக்கி எலும்புமுறிவு ஏற்பட்டவர்களுக்கு, உடனடி அறுவை சிகிச்சை மேற்கொள்கிறோம். லேமினார் ஏர்பிளோ வசதியுடன் அறுவை சிகிச்சை அரங்கு உள்ளது. தினமும் சாலை விபத்துக்களால் 5 அவசர எலும்பு முறிவு அறுவை சிகிச்சைகள் மேற்கொள்கிறோம். இதனால், உள்நோயாளிகளாக தங்குவதற்கான காலம் குறைந்துள்ளது. பெரிய விபத்து ஏற்பட்டால் கூட சமாளிக்கும் வகையில், 20 படுக்கைகள் எப்போதும் தயார் நிலையில் வைத்திருக்கிறோம். மூட்டு மாற்று அறுவைசிகிச்சையும் செய்து வருகிறோம். முன்பு இரண்டு அறுவை சிகிச்சை அரங்கு இருந்த நிலையில், தற்போது 4 அறுவை சிகிச்சை அரங்குகள் உள்ளது. இதனால் அறுவை சிகிச்சை அரங்குக்காக நோயாளிகளை காத்திருக்க வேண்டிய தேவை இல்லை. அரசு காப்பீட்டு திட்டத்தின் கீழ் 2017-ம் ஆண்டில் 960 பேருக்கு சிகிச்சை அளித்துள்ளோம். இது 2018-ம் ஆண்டில் 1,632 பேராக உயர்ந்துள்ளது.’’ இதயவியல் துறை தலைவர் இளமாறன் ‘‘1970-ம் ஆண்டு முதல் எங்கள் மருத்துவமனையில் இதயவியல் துறை செயல்பட்டு வருகிறது. அப்போது, ஒரே ஒரு மருத்துவர்தான் இருந்தார். சிறிய அறைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. பின்னர், 1990-களில் துறை வளர்ச்சி அடைந்தது. தற்போது, புதிய கட்டிடத்தில் பல்வேறு நவீன வசதிகளுடன் செயல்பட்டு வருகிறது. மாதத்திற்கு 500 பேர் நெஞ்சுவலி, மாரடைப்பு போன்ற பிரச்னைக்காக சிகிச்சைக்கு வருகின்றனர். இவர்களில், 50 சதவீதம் பேருக்கு ஆஞ்சியோகிராம் சிகிச்சை தேவைப்படுகிறது. இதனால், சமீபத்தில் அமைக்கப்பட்ட கேத் லேபில் நோயாளிகளுக்கு ஆஞ்சியோகிராம், ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை மேற்கொள்கிறோம். தினமும் 10 முதல் 15 நோயாளிகளுக்கு, ஆஞ்சியோகிராம், ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை அளிக்கிறோம். கடந்த ஓராண்டில், 2 ஆயிரம் பேர் பயனடைந்துள்ளனர். தனியார் மருத்துவமனையில் இந்த சிகிச்சைக்கு ₹2.5 லட்சம் வரை செலவாகும். ஆனால், அரசு காப்பீடு திட்டத்தின்கீழ், நாங்கள் இலவசமாக சிகிச்சை மேற்கொள்கிறோம். மருத்துவ நிபுணர்கள் 24 மணி நேரமும் நோயாளிகளை கண்காணிக்கிறார்கள்’’குடல், இரைப்பை, கல்லீரல் அறுவை கிசிச்சை துறை தலைவர் கேசவன் ‘‘சில ஆண்டுகள் செயல்படாமல் இருந்த எங்கள் துறை 2017-ம் ஆண்டு முதல் புதிய கட்டடத்தில் இயங்கி வருகிறது. 2017-ம் ஆண்டில், 86 பேருக்கு உணவுக்குழாய் ஓட்டை, கணையம், கல்லீரல், பெருங்குடல், சிறுகுடல் சிகிச்சைகள் மேற்கொண்டுள்ளோம். 2018ல் சிகிச்சை பெற்ற நோயாளிகளின் எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகரித்தது, 224 பேருக்கு சிகிச்சை அளித்தோம். 2019ம் ஆண்டில், 3 மாதங்களில் 65 பேருக்கு சிகிச்சை அளித்துள்ளோம். நுண்துளை அறுவைசிகிச்சைகளை மேற்கொண்டு வருகிறோம். சில மாதங்களுக்குமுன் 91 வயது முதியவர் ஒருவர், கறித்துண்டு ஒன்றை விழுங்கினார். அவரின் உணவுக்குழாயில் 9 செ.மீ அளவுள்ள கறி துண்டு சிக்கிக்கொண்டது. மிகவும் சிக்கலான அறுவை சிகிச்சையில் நாங்கள் வெற்றிகரமாக அகற்றினோம். அதேபோல், உணவு மண்டலத்தில் ஏற்படும் புற்றுநோய் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். புற்று நோய் காரணிகளை கண்டறிந்து சிகிச்சை அளிக்கிறோம்.’’அரசின் கவனத்துக்கு…கோவை அரசு மருத்துவக் கல்லூரிக்கும், மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கும் 8 கி.மீ தூரம் உள்ளது. பீளமேட்டில் அவினாசி சாலையில் மருத்துவ கல்லூரியும், திருச்சி சாலையில் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையும் செயல்பட்டு வருகிறது. இதனால், மாணவர்கள் தினமும் பேருந்து மூலம் மருத்துவமனைக்கு அழைத்து வரப்படுகிறார்கள். மருத்துவ மாணவர்கள், பட்டமேற்படிப்பு டாக்டர்கள் இதனால் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகின்றனர். அதே நேரத்தில் மருத்துவக்கல்லூரி வளாகத்தில் மருத்துவமனை இல்லை.மருத்துவமனைக்கு வரும் புறநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்ததால், புறநகரில் ஒரு அரசு மருத்துவமனை அமைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. கோவை அரசு மருத்துவ கல்லூரி வளாகத்தில் மருத்துவமனை அமைக்கப்படும்பட்சத்தில் மருத்துவ மாணவர்களுக்கும், கருமத்தம்பட்டி, சோமனூர், சின்னியம்பாளையம், காளப்பட்டி, சரவணம்பட்டி, சூலூர் உள்ளிட்ட புறநகர் பகுதியை சேர்ந்த மக்கள் பயன் பெறுவார்கள். இதை கவனத்தில் கொண்டு சுகாதாரத்துறை புதிய மருத்துவமனையை விரைவில் தொடங்க வேண்டும்.– சுந்தர் பார்த்தசாரதி, சதீஷ் குமார் படங்கள்: சதீஷ் தனபாலன்

You may also like

Leave a Comment

6 + 5 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi