கோவை, மே 30: கோவை அரசு கலைக்கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கான மொத்தம் உள்ள 1,433 இடங்களுக்கு 34 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர். இதையடுத்து மாணவர்களின் மதிப்பெண் மற்றும் இடஒதுக்கீடு அடிப்படையில் கல்லூரி சார்பில் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து நேற்று மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெற்றது. இந்த கலந்தாய்வை கல்லூரி முதல்வர் உலகி தொடங்கி வைத்தார்.
இந்த கலந்தாய்வில் பங்கேற்ற மாணவ-மாணவிகளின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டன. தொடர்ந்து அவர்கள் தாங்கள் விரும்பிய பாடங்களை தேர்வு செய்தனர். இறுதியில் சம்பந்தப்பட்ட மாணவ-மாணவர்களுக்கு மாணவர் சேர்க்கைக்கான ஆணை வழங்கப்பட்டது. இது குறித்து கல்லூரி நிர்வாகத்தினர் கூறியதாவது: இந்த சிறப்பு பிரிவில் தேசிய மாணவர் படையினர், மாற்றுத்திறனாளிகள், முன்னாள் படை வீரர்களின் வாரிசுகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். விளையாட்டு வீரர்களுக்கு 43 இடங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன.