கோவை, ஜூன் 5: கோவையில் வெவ்வேறு பகுதிகளில் கஞ்சா, போதை மாத்திரை விற்ற 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். கோவை உக்கடம் போலீசார் வின்சண்ட் ரோடு பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு நின்றிருந்த வாலிபர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை சோதனை செய்தனர். அப்போது அவர்களிடம் கஞ்சா இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
விசாரணையில் அந்த வாலிபர்கள் மேட்டூர் மதுரை வீரன் கோயில் வீதியை சேர்ந்த பாலசுப்பிரமணி (30) மற்றும் சுந்தராபுரத்தை சேர்ந்த ஜாபர் சாதிக் (30) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்து, சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து 150 கிராம் கஞ்சா, 2 செல்போன், ஒரு பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
அதேபோல கவுண்டம்பாளையம் போலீசார் சங்கனூர் ரோடு பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு ஒரு ஓட்டல் முன்பு சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த நபரை பிடித்து சோதனை செய்தனர். அதில் அவரிடம் போதை மாத்திரைகள் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ரத்தினபுரியை சேர்ந்த மணிகண்டன் என்கிற தாமரை (40) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடம் இருந்து 53 போதை மாத்திரை மற்றும் ரூ.600ஐ பறிமுதல் செய்தனர்.