கோவை, ஆக. 21: கோவை டாடாபாத் தலைமை மின்வாரியம் அலுவலகம் முன்பு மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் குடும்பத்துடன் நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தெற்கு கிளை தலைவர் காளிமுத்து தலைமை வகித்தார். இதில், கோவை மாநகர் கிளை தலைவர் மதுசூதனன், மாநில செயலாளர் மணிகண்டன் ஆகியோர் பங்கேற்று சிறப்புரையாற்றினர். மாவட்ட செயலாளர் சிஐடியு கிருஷ்ணமூர்த்தி, செயலாளர் ரத்தினகுமார், பொருளாளர் பத்மநான், மாநில செயற்குழு உறுப்பினர் பழனிசாமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இதில், பல ஆண்டுகளாக சம்பளம் இல்லாமல் வேலை செய்யும் ஒப்பந்த ஊழியர்களை அடையாளம் கண்டு தினக்கூலி வழங்க வேண்டும். பிரிவுக்கு இரண்டு பேர் ஒப்பந்ததாரர் என்ற முடிவை கைவிட்டு, வாரியமே ஒப்பந்த ஊழியர்களை நேரடியாக நியமித்து தினக்கூலி வழங்க வேண்டும். தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.