கோவை, நவ. 23: கோவை மாநகராட்சிக்கு நடப்பு 2024-25 நிதியாண்டின் இரண்டாம் அரையாண்டு வரையில் செலுத்தவேண்டிய சொத்து வரி, காலியிட வரி, தொழில் வரி மற்றும் குடிநீர் கட்டணம் உள்ளிட்ட அனைத்து வரியினங்களை பொதுமக்கள் எளிதாக செலுத்துவதற்கு ஏதுவாக சிறப்பு வரி வசூல் முகாம் மாநகரில் இன்றும், நாளையும் (சனி, ஞாயிறு) பல்வேறு இடங்களில் நடக்கிறது. கிழக்கு மண்டலத்தில் 7வது வார்டு, மேற்கு மண்டலத்தில் 35 மற்றும் 39வது வார்டுகள், வடக்கு மண்டலத்தில் 14வது வார்டு,
தெற்கு மண்டலத்தில் 89, 94, 96வது வார்டுகள், மத்திய மண்டலத்தில் 32 வார்டு ஆகிய பகுதிகளில் உள்ள அனைத்து வரி வசூல் மையங்கள் மற்றும் சிறப்பு வரி வசூல் மையங்களில் இம்முகாம் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடக்கிறது. எனவே, மாநகராட்சிக்கு செலுத்தவேண்டிய வரியினங்களை செலுத்தி, மேல்நடவடிக்கையை தவிர்க்க வேண்டுகிறோம் என மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் அறிவித்துள்ளார்.